ஜோகூர் பாரு, ஜூன் 20 — ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பதை எளிதாக்க, தெற்குப் பகுதிகளுக்கான கூடுதல் மின்சார ரயில் (ETS) சேவைகளை ஏற்படுத்தியிருப்பதாக கேதிஎம்பி (KTMB) நிறுவனம் அறிவித்தது.
இந்த கூடுதல் ரயில்களுக்கான பயணச்சீட்டு நேற்று நண்பகல் மணி 12:00 முதல் விற்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களின் டிக்கெட்டுகளை கே.தி.எம்.பி செயலி (KITS Style) மற்றும் online.ktmb.com.my அதிகாரப்பூர்வ இணையத்தளம் அல்லது டிக்கெட் இயந்திரங்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்தக் கூடுதல் ஈ.டி.எஸ் சேவைகள் வரும் ஜூலை 10 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கு வழங்கப்படுமென கே.தி.எம்.பி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஜூன் முதலாம் தேதி ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 11-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும்.








