ஜோகூர் பாரு, ஜூலை 20 — கோத்தா திங்கி, பெங்கெராங்கில் உள்ள உலு பாப்பான், சுங்கை தஞ்சோங் செரிண்டிட் ஆற்றில் நேற்றிரவு கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு 9.00 மணி அளவில் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் கிடைத்தத் தகவலை அடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கோத்தா திங்கி மாவட்டக் காவல்துறை தலைவர் துணை ஆணையர் யூசோப் ஒத்மான் தெரிவித்துள்ளார்.
கோத்தா திங்கி மாவட்டக் காவல்துறை தலைமையகம் (IPD) மற்றும் ஜோகூர் மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் (IPK) D10 தடயவியல் பிரிவைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனைகளை மேற்கொண்டனர்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், கைகளும் கால்களும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இறந்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக யூசோப் ஒத்மான் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் (கொலை வழக்கு) கீழ் விசாரிக்கப்பட்டு வரும் வேளையில், பிரேதப் பரிசோதனைக்காகச் சடலம் பாசிர் கூடாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அல்லது காணாமல் போன குடும்ப உறுப்பினர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக முன்வந்து விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் வழக்கு விசாரணை அதிகாரி நூர் அசிசி இன்ஸாமை 013-7878771 என்ற எண்ணலோ, அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது கோத்தா திங்கி காவல்துறையை ஹாட்லைன் 07-8831222 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கலாம்.







