ஜோஹர் பாரு, ஜூலை 21 — ஜோகூர் ஃபாரஸ்ட் சிட்டியில் (Forest City) உள்ள நெட்வொர்க் ஸ்கூல் (Network School) நிறுவனத்தின் வணிக உரிமத்தை ரத்து செய்யவும், ஜூலை 22 முதல் அதன் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தவும் இஸ்கந்தர் புத்திரி மாநகராட்சி (MBIP) எடுத்த முடிவிற்கு ஜோஹர் மாநில அரசு ஆதரவு அளித்துள்ளது.
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகள், அமலாக்கக் கண்டுபிடிப்புகள் மற்றும் விளக்கங்களை மறுஆய்வு செய்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜோஹர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஒரு வளாகம் நீண்ட காலமாக இயங்கி வருவதால், அதன் அனைத்து செயல்பாடுகளும் தானாகவே உரிமத் தேவைகளுக்கு இணங்குவதாக அர்த்தமல்ல .
"விதிமீறல் கண்டறியப்படும்போது, எந்தவொரு சமரசமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென “ ஓன் ஹஃபிஸ் கூறினார்.
பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் மாநில வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் தரமான முதலீடுகளுக்கு ஜோகூர் எப்போதும் தயாராகவே உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
"இருப்பினும், எந்தவொரு முதலீட்டாளரோ, நிறுவனமோ அல்லது அமைப்போ நாட்டின் சட்டங்களின் இறையாண்மைக்கு மேல் இருக்க முடியாது," என்று அவர் கூறினார்.
2024-இல் தொடங்கப்பட்ட நெட்வொர்க் ஸ்கூல் (Network School), காயின்பேஸ் (Coinbase) நிறுவனத்தின் முன்னாள் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியும் முதலீட்டாளருமான பாலாஜி சீனிவாசனால் நிறுவப்பட்ட ஒரு தனியார் குடியிருப்பு சமூகமாகும்.
நெட்வொர்க் ஸ்கூல் பயன்படுத்திய இரண்டு வளாகங்கள் ஊராட்சி அதிகாரத் தரப்பின் விதிமுறைகளை மீறியுள்ளதாக சனிக்கிழமையன்று ஓன் ஹஃபிஸ் தெரிவித்தார்.
அவற்றில் ஒரு வளாகம் செல்லுபடியாகும் அலுவலக வணிக உரிமத்தைக் கொண்டிருந்த வேளையில், மற்றொன்று சட்டவிரோதமாக இயங்கி வந்தது.
முன்னதாக அதன் பங்கேற்பாளர்களில் இஸ்ரேலிய இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து நெட்வொர்க் ஸ்கூல் சர்ச்சையானது.







