கோலாலம்பூர், நவ.28: கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒருமுறை சிறப்பு நிதியுதவியான தலா 10,000 ரிங்கிட்டை விரைவாக வழங்குமாறு MASFIH அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிதியுதவியை வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ நிகழ்வு கடந்த புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்றிருந்தாலும், இன்று வரை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படவில்லை என MASFIH அமைப்பின் பேச்சாளர் ஆர். மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 95 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடித் தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதியுதவியை விரைவாக வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், நிதியுதவிக்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவைக்கும், திட்டத்தைச் செயல்படுத்த உதவிய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான MITRA ஆகியவற்றுக்கும் MASFIH நன்றி தெரிவித்துள்ளது.
மேலும், காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு முறையான தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தி, அவ்வப்போது நிலவரங்களைத் தெரிவிக்கவும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப் பொறுப்பான அதிகாரிகளை நியமிக்கவும் அரசாங்கத்தைக் MASFIH கேட்டுக்கொண்டது.
காணாமல் போன தங்களது அன்புக்குரியவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள குடும்பங்களுக்கு உரிமை இருப்பதாகக் குறிப்பிட்ட மணிவண்ணன், ஒவ்வொரு முறையும் அதிகாரிகளைத் தனித்தனியாகத் தொடர்புகொண்டு தகவல்களைக் கேட்டறிய வேண்டிய நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
சில சந்தர்ப்பங்களில், காணாமல் போனவர்கள் தொடர்பான புதிய தகவல்கள் குடும்பத்தினருக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படுவதற்கு முன்னரே, பொதுவெளியில் வெளியிடப்படும் அறிவிப்புகள் அல்லது நாடாளுமன்ற நடவடிக்கைகள் வாயிலாக வெளியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் பல்வேறு அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதைப் புரிந்துகொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பு, பொறுப்புகளைத் தெளிவாக வரையறுத்தல் மற்றும் உரிய நேரத்தில் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் அவசியம் என்றார் மணிவண்ணன்.
எனவே, காணாமல் போன 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதியுதவியை விரைவாக வழங்குவதுடன், அவர்களுக்குத் தொடர்ச்சியான தகவல்களையும் ஆதரவையும் வழங்குவதற்கான முறையான நடைமுறையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.








