கோலாலம்பூர், செப். 22 — நேபாள வெள்ளத்தில் காணாமல் போன 55 மலேசியர்கள் தொடர்பான விவகாரத்தை, அந்நாட்டு பிரதமர் பலேந்திர ஷாவுடனான தொலைபேசி உரையாடலின்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எழுப்பியுள்ளார்.
இன்னும் தங்களது அன்புக்குரியவர்கள் தொடர்பான தகவலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களின் கவலைகளையும் நம்பிக்கைகளையும் நேபாளப் பிரதமரிடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

மேலும், காணாமல் போனவர்கள் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளில் எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்காமல் போனால், அவர்களின் நிலையை அதிகாரப்பூர்வமாகக் கையாள்வதற்கான முறையான நடைமுறை அவசியம் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சட்டரீதியான, நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களை எதிர்கொள்ள உதவும்.
இது தொடர்பான முன்மொழிவை விரிவாகக் குறிப்பிட்டு நேபாளப் பிரதமர் பலேந்திர ஷாவுக்கு அதிகாரப்பூர்வக் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் அழிவின் அளவு சுனாமிக்கு ஒப்பானதாக இருப்பதாகவும் பலேந்திர ஷா தம்மிடம் தெரிவித்ததாக அன்வார் கூறினார்.
எனினும், கடுமையான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று நேபாளப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.







