புத்ராஜெயா, செப். 27 – நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தேடும் நடவடிக்கை தொடர்பான தற்போதைய நிலவரத்தை அறிந்துகொள்வதற்காக இன்று விஸ்மா புத்ராவில் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள், மீட்கப்பட்டவர்களின் சரிபார்ப்பு மற்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் செயல்முறைகள் தொடர்பான விரிவான தகவல்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன.

நேபாளத்தில் பேரிடர் ஏற்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் நிலை தொடர்பாக குடும்பத்தினருக்கு அண்மைய தகவல்களை வழங்கும் நோக்கில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை (NADMA), மலேசிய சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (SMART), மலேசிய அரச காவல்துறை (PDRM), வேதியியல் துறை, தேசியப் பதிவுத் துறை (JPN) மற்றும் சமூக நலத்துறை (JKM) ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கான இரண்டாவது விளக்கக் கூட்டம் இதுவாகும். இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 30ஆம் தேதி முதலாவது விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
அச்சம்பவம் நிகழ்ந்து ஐந்து நாட்களுக்குப் பின்னர் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில், நேபாளத்தில் மீட்கப்பட்ட சடலங்களை அடையாளம் காணும் பணிக்காக காணாமல் போனவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
எனினும், அந்த முதலாவது கூட்டத்தில் அனைத்து குடும்பங்களும் பங்கேற்கவில்லை.

இதனிடையே, காணாமல் போன மலேசியர்களைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட SMART குழு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நேபாளத்துக்கு அனுப்பப்பட்டது.
செப்டம்பர் 22ஆம் தேதி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவிடம் எடுத்துரைத்திருந்தார்.

மேலும், 55 மலேசியர்களின் நிலை தொடர்ந்து கண்டறியப்படாமல் இருந்தால், அவர்களைத் தேடுவதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் முறையான ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் அன்வார் வலியுறுத்தியிருந்தார்.







