4,700 கலைத்துறையினர் சொக்சோ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்

28 நவம்பர் 2026, 9:39 AM
4,700 கலைத்துறையினர் சொக்சோ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்
4,700 கலைத்துறையினர் சொக்சோ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்தனர்

கோலாலம்பூர், நவ.28 – மலேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (FINAS) மற்றும் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் (PERKESO) இணைந்து செயல்படுத்திய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், 2024-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரை மொத்தம் 4,700 கலைத்துறையினர் பயனடைந்துள்ளனர்.

இதனை தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில்

பயனடைந்தவர்களில் 200 பேர் மூத்த கலைஞர்கள் என்றும், திரைக்கு முன்னால் பணியாற்றும் கலைஞர்கள் மட்டுமின்றி, திரைக்குப் பின்னால் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்கப்படுவதை இத்திட்டம் உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கலைத்துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் நலன்களையும் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், PERKESO-வின் சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டமான SKSPS-இன் கீழ் கலைத்துறையினருக்கான பங்களிப்புத் தொகையைச் செலுத்துவதற்கு FINAS 104,850 ரிங்கிட் நிதி ஒதுக்கியிருந்தது.

தகவல் தொடர்புத் துறை மற்றும் மனிதவள அமைச்சுகளின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 4,500 கலைத்துறையினர் பயனடைந்தனர்.

இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டம், சுயதொழில் செய்பவர்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளின்போது ஏற்படும் விபத்துகள் மற்றும் தொழில்சார் நோய்களால் பாதிக்கப்படும்போது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் கீழ், தொழில் தொடர்பான விபத்துகளால் ஏற்படும் காயங்களுக்கு மருத்துவச் சலுகைகள், தற்காலிக மற்றும் நிரந்தர ஊனமுற்ற நிலைக்கான இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், தொழில் தொடர்பான விபத்தினால் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அவரைச் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

குறிப்பாக, நிலையான வருமானம் மற்றும் வேலைப் பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றும் கலைத்துறையினருக்கு இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டம் முக்கிய ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.