கோலாலம்பூர், ஜூலை 30 : தெருப் பூனை கடித்ததில் பலத்த காயமடைந்த கால்நடை உதவியாளர் உட்பட இரு சொக்சோ - சமூகப் பாதுகாப்பு அமைப்பின் சந்தாதாரர்கள், வேலை சாராத விபத்துத் திட்டம் அல்லது 'LINDUNG 24 Jam' திட்டத்தின் கீழ், தற்காலிக ஊனமுற்றோருக்கான பலன்களைப் பெற்றனர்.
கால்நடை உதவியாளரான 26 வயது நூர் அமி அதிரா முகமது ஈசாவை, கடந்த ஜூன் 24 -ஆம் தேதி, தெருப் பூனை ஒன்று, அவரது வலது ஆள்காட்டி விரலைக் கடித்ததில், அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
தமது வீட்டிற்குள் நுழைந்து சமையலறை பொருட்களைச் சேதப்படுத்திய தெருப் பூனையைப் பிடிக்க முயன்றபோது அவருக்கு அக்காயம் ஏற்பட்டது.
நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றபோது, அவரது வலது ஆள்காட்டி விரலை அந்தப் பூனை எலும்பு தெரியும் அளவுக்கு பலமாகக் கடித்தது.
உடனடியாக அவர் ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்று, பின்னர் அன்று இரவே செர்டாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
பாதிக்கப்பட்டவருக்கு ஜூன் 24 முதல் ஜூலை 31 வரை மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
அவர் மருத்துவ விடுப்பில் இருந்த காலத்திற்கான வருமான இழப்பீட்டுத் தொகையைப் பெற தகுதி பெற்றுள்ளார் என்று சொக்சோ தெரிவித்தது.
இந்த தற்காலிக ஊனமுற்றோர் பலன் தவிர, மருத்துவச் சிகிச்சைச் செலவுகளுக்கான தொகை மறுபரிசீலனை (Bayaran Ganti Belanja) கோரவும் அவர் தகுதி பெற்றுள்ளார்.
வேலை நேரம் அல்லது வேலை செய்யும் இடத்திற்கு வெளியே நடக்கும் விபத்துகளுக்கான சமூகப் பாதுகாப்பு இடைவெளியைக் குறைப்பதே இந்த 'LINDUNG 24 Jam' திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
"முன்பெல்லாம் வேலை விபத்து இல்லை என்ற காரணத்தால் பல விபத்து உரிமைகோரல்கள் நிராகரிக்கப்பட்டதாகப் புகார்கள் வந்தன, இனிமேல் அதுபோன்ற புகார்கள் வராது என நம்புகிறோம்" என்று சொக்சோ கூறியது.
இதற்கிடையில், மற்றொரு தனிப்பட்ட சம்பவத்தில், கிள்ளான், தெங்கு அம்புவான ரஹிமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரரைப் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவற்ற நிலைக்குச் சென்ற ஒரு தொழிற்சாலை ஆபரேட்டரும் இதே திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதி பெற்றுள்ளார் என்று சொக்சோ குறிப்பிட்டது.
39 வயது நூர் ஃபாஇஸ் அஸாலி- சிற்கு முதற்கட்டமாக தற்காலிக ஊனமுற்றோர் பலன் தொகை அங்கீகரிக்கப்பட்டது.
அவரது மருத்துவ விடுப்பு அக்டோபர் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவர் பெறும் மொத்தப் பலன் தொகையின் மதிப்பும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வருமான இழப்பீட்டுத் தொகை தவிர, நோயாளிக் கட்டில், சரிசெய்யக்கூடிய சக்கர நாற்காலி, ரிப்பிள் மெத்தை, சளி உறிஞ்சும் இயந்திரம், பால் மற்றும் டயப்பர்கள் உள்ளிட்ட பல மறுவாழ்வு உபகரணங்களையும் சொக்சோ அவருக்கு வழங்கி வருகிறது என்று அவ்வமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்தது.







