ஷா ஆலாம், அக்.22: தனியார் மருத்துவக் காப்பீட்டுடன் ஒப்பிடுகையில்,‘லிண்டுங் 24 ஜாம்’ திட்டம் வேறுபட்ட சமூகப் பாதுகாப்பு அணுகுமுறையைக் கொண்டுள்ளது.
தனியார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பொதுவாக மருத்துவச் செலவுகளுக்கு குறிப்பிட்ட வரம்புகளை நிர்ணயிக்கும் நிலையில், ‘லிண்டுங் 24 ஜாம்’ திட்டம் விபத்து நிகழும் தருணத்திலிருந்து தொழிலாளர் சிகிச்சை பெற்று மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரையிலும், தேவையான சந்தர்ப்பங்களில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வரம்பு இன்றி தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பங்களிப்பை ஊழியர்களே முழுமையாகச் செலுத்த வேண்டும். முதல் ஈராண்டுகளுக்கு ஊதியத்தில் 0.75 விழுக்காடும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 1 விழுக்காடும், ஆறாவது ஆண்டிலிருந்து 1.25 விழுக்காடும் பங்களிப்பாக செலுத்த வேண்டுமென பெர்கேசோவின் நலன்கள் பிரிவின் உயர் நிர்வாக அதிகாரி மகேசன் கிருஷ்ணசாமி, மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
எனினும், வேலையிலிருந்து ஓய்வு பெற்றப் பின்னர் செலுத்தப்பட்ட பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற முடியாது. இதற்குக் காரணம், பெர்கேசோ தனிநபர் சேமிப்புக் கணக்கு முறையில் செயல்படும் அமைப்பு அல்ல என்பதே ஆகும்.
மாறாக, சமூக ஒற்றுமை மற்றும் அபாயங்களை அனைவரும் பகிர்ந்துகொள்ளும் கொள்கையின் அடிப்படையில் செயல்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பாக பெர்கேசோ விளங்குவதாக மகேசன் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

எனவே, தொழிலாளர் செலுத்தும் பங்களிப்பு தனிப்பட்ட சேமிப்பாகச் சேர்க்கப்படுவதில்லை. தகுதியுடைய தொழிலாளர்கள் தேவையான நேரத்தில் சமூகப் பாதுகாப்பையும் நிதியுதவியையும் பெறுவதற்கான கூட்டு பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாகவே அந்தப் பங்களிப்பு அமைகிறது.
தகுதியுடைய உதவித்தொகைகளைக் கோர விரும்பும் தொழிலாளர்கள், இணையவழி விண்ணப்பிக்கலாம் அல்லது அருகிலுள்ள பெர்கேசோ அலுவலகத்தை அணுகலாம்.
விண்ணப்பத்தின் தன்மைக்கு ஏற்ப,மருத்துவர் வழங்கிய அசல் மருத்துவச் சான்றிதழ், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் போலிஸ் புகார் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

அங்கீகரிக்கப்படும் உதவித்தொகைகள் பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இதன் மூலம், நிதியுதவி பெறுவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு, உரிய உதவி பயனாளியை நேரடியாகச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘லிண்டுங் 24 ஜாம்’ திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை பெர்கேசோவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாகப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
24 மணி நேர லிண்டுங் சொக்சோ பாதுகாப்பு, விபத்துக்குப் பின்னர் ஒருமுறை வழங்கப்படும் இழப்பீட்டுடன் தனது பொறுப்பை நிறுத்திக்கொள்ளாமல், தொழிலாளரின் சிகிச்சை, மறுவாழ்வு, வருமான இழப்பு மற்றும் குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பு என பல்வேறு தேவைகளைக் கருத்தில் கொண்டு தொடர்ச்சியான ஆதரவை வழங்குகிறது.






