பெட்டாலிங் ஜெயா, செப். 27 – பெட்டாலிங் ஜெயாவை படைப்பாற்றல் பொருளாதார மையமாக மேம்படுத்தும் சிலாங்கூர் அரசின் இலக்குக்கு, பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) முழுமையான ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக துணை மேயர் ஷாரினாஸ் சாம்சுடின் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப படைப்பாற்றல் பொருளாதாரம் மிகவும் பொருத்தமானதாக வளர்ந்து வருவதால், பெட்டாலிங் ஜெயாவை அத்துறையின் மையமாக உருவாக்கும் முன்மொழிவை மாநகராட்சி வரவேற்பதாக அவர் கூறினார்.
MBPJ-யில் படைப்பாற்றல் பொருளாதாரத்தை மையப்படுத்திய குழுவும், அதற்கான மூலோபாயத் திட்டமும் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் கீழ் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்முனைவோர் தொடர்பான முயற்சிகள், நகர அளவில் படைப்பாற்றல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய ஆதரவாக அமையும்.
இதன்வழி, பெட்டாலிங் ஜெயாவை படைப்பாற்றல் பொருளாதாரத்துக்கான மையமாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







