வெள்ளநீர் தேங்கியுள்ள மூன்று கிராமங்களுக்கு கூடுதல் உதவி – சிலாங்கூர் அரசு பரிசீலனை

28 நவம்பர் 2026, 6:41 AM
வெள்ளநீர் தேங்கியுள்ள மூன்று கிராமங்களுக்கு கூடுதல் உதவி – சிலாங்கூர் அரசு பரிசீலனை
வெள்ளநீர் தேங்கியுள்ள மூன்று கிராமங்களுக்கு கூடுதல் உதவி – சிலாங்கூர் அரசு பரிசீலனை
வெள்ளநீர் தேங்கியுள்ள மூன்று கிராமங்களுக்கு கூடுதல் உதவி – சிலாங்கூர் அரசு பரிசீலனை

கோலா சிலாங்கூர், நவ.28 – சிலாங்கூரில் வெள்ளத்திற்குப் பின்னரும் நீர்வடியாமல் தேங்கிக் கிடக்கும் பாரிட் மாஹாங், கம்போங் ஈஜோக் மற்றும் கம்போங் புக்கிட் ஹிஜாவ் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் (MMKN) விரிவாக விவாதிக்கப்படும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

குறிப்பாக, நீண்ட நேரமாக வெள்ளநீர் வடியாமல் தேங்கியுள்ள பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அல்லது அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது குறித்தும் ஆராயப்படும் என அவர் கூறினார்.

இன்று கம்போங் ஈஜோக்கில் நடைபெற்ற வெள்ளத்திற்குப் பிந்தைய தூய்மைப் பணியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புக்கிட் சாங்காங் பகுதியின் நிலைமையும் அடுத்த ஓரிரு நாட்களுக்கு உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் என்றார்.

இதற்கிடையில், வெள்ளநீரை விரைவாக வெளியேற்றுவதற்கான தீர்வுகள் குறித்து மாநில அரசு செயலாளர், நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) அதிகாரிகள் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் ஆகியோருக்கு இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முன்னெடுக்கக்கூடிய சில அடிப்படை நடவடிக்கைகள் தொடர்பாக இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.

வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான இரண்டு முக்கிய அம்சங்களாக, நீர் வெளியேற்றக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குதல் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், சிலாங்கூரின் 12 ஊராட்சி மன்றங்களைச் சேர்ந்த அவசரகால நடவடிக்கைக் குழுவான PANTAS உறுப்பினர்களின் விடுமுறையை முடக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில், கம்போங் ஈஜோக் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வெள்ளத்திற்குப் பிந்தைய தூய்மைப் பணியில் அரசு அமைப்புகள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 400 பணியாளர்களும் தன்னார்வலர்களும் பங்கேற்றனர்.

குறிப்பாக, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி நிலவரப்படி, பாரிட் மாஹாங் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு தலா 3,000 ரிங்கிட் உதவி வழங்கப்பட்டுள்ளதாகக் கோலா சிலாங்கூர் மாவட்ட அதிகாரி முகமட் ராய்ஸ் ரட்ஸுவான் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

இதில் மாநில அரசின் 500 ரிங்கிட் உதவியும் மத்திய அரசின் உதவிகளும் உள்ளடங்குகின்றன.

மேலும், பாரிட் மாஹாங் மற்றும் புக்கிட் ஹிஜாவ் பகுதிகளில் வெள்ளநீரை விரைவாக வெளியேற்றுவதற்காகக் கூடுதலாக இரண்டு நீரிறைப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மட் அறிவித்துள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.