வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதே நகர்ப்புறங்களில் திடீர் வெள்ளத்துக்குக் காரணம்: நிபுணர்

27 நவம்பர் 2026, 7:15 AM
வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதே நகர்ப்புறங்களில் திடீர் வெள்ளத்துக்குக் காரணம்: நிபுணர்

நிபோங் திபால், நவ.27 – புதிய குடியிருப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட வடிகால் வடிவமைப்பு விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படாததே நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக உள்ளது.

இதனை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (USM) ஆய்வாளர் டாக்டர் சாங் சுன் கியாட் தெரிவித்தார்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (USM) ஆய்வாளர்
டாக்டர் சாங் சுன் கியாட்

புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது வடிகால் அமைப்புகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகள் முறையாகப் பரிசீலிக்கப்படுவதுடன், அவை நடைமுறையிலும் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவில் வடிகால் அமைப்புகளைத் திட்டமிடுவதற்கும் வடிவமைப்பதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிகால் கையேடு (MSMA) மற்றும் வடிகால் மாஸ்டர் திட்டம் (PISMA) உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன.

அதேபோல், புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை ஊராட்சி மன்றங்களின் ஒருங்கிணைந்த மையமான OSC மூலம் ஆய்வு செய்து, வடிகால் வடிவமைப்பு, தொழில்நுட்பக் கணக்கீடுகள் மற்றும் தொடர்புடைய நிபந்தனைகள் சரிபார்க்கப்படுவதாகவும் சாங் சுன் தெரிவித்தார்.

எனவே, திடீர் வெள்ளப் பிரச்சனைக்கு வழிகாட்டுதல்கள் இல்லாதது காரணமல்ல; ஏற்கெனவே உள்ள விதிமுறைகள் எந்த அளவுக்கு முறையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதே முக்கியப் பிரச்சனை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்களும் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணமாக அமையலாம்.

குறிப்பாக, பொது இடங்களில் வீசப்படும் குப்பைகள் வடிகால்களில் அடைப்பை ஏற்படுத்தி, நீரோட்டத்தைத் தடுக்கக்கூடும். இதனால் கனமழையின்போது தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக அவர் விளக்கினார்.

மேலும், நகர்ப்புற வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், PLANMalaysia நீடித்த நீர்வள மேலாண்மைக்கான நகர்ப்புற திட்டமிடல் வழிகாட்டுதலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS), சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிகால் கையேட்டின் மூன்றாவது பதிப்பை 2027-ஆம் ஆண்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய பதிப்பில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் உருவாகும் வெள்ள அபாயங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கனமழையைச் சமாளிக்கும் வகையில், மேலும் திறன்மிக்க மற்றும் நிலையான வடிகால் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு வழிவகை ஏற்படும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.