ஷா ஆலாம், நவ.27 – சிலாங்கூரில் கோலா லங்காட், கோலா சிலாங்கூர் மற்றும் செப்பாங் ஆகிய மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 305 குடும்பங்களைச் சேர்ந்த 986 பேர் ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக நலத்துறையின் (JKM) பேரிடர் தகவல் இணையத்தளத்தில் இன்று காலை 6.04 மணியளவில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கோலா லங்காட் மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 248 குடும்பங்களைச் சேர்ந்த 808 பேர் மூன்று நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 149 பேர் இரண்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
செப்பாங் மாவட்டத்தில் கம்போங் டத்தோ அகமட் ரசாலி மக்கள் மண்டபத்தில் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
நிவாரண மையங்களில் உள்ளவர்களில் 638 பெரியவர்கள், 315 சிறுவர்கள் மற்றும் 33 கைக்குழந்தைகள் ஆவர். மேலும், அவர்களில் 74 முதியவர்களும் 33 மாற்றுத்திறனாளிகளும் (OKU) அடங்குகின்றனர்.







