ஷா ஆலாம், நவ.24 – கோலா சிலாங்கூர், பாரிட் மாஹாங் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு இதுவரை தலா RM3,000 மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாநில அரசு மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் வழங்கப்படும் இந்த உதவிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) பதிவு செய்துள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் RM500 உதவியும், மத்திய அரசின் நிதியுதவியும் இந்த மொத்தத் தொகையில் அடங்குவதாகக் கோலா சிலாங்கூர் மாவட்ட அதிகாரி முகமட் ராய்ஸ் ரட்ஸுவான் தெரிவித்தார்.

பாரிட் மாஹாங் பகுதியில் உதவி விநியோகம் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக மஹாராஜா லேலா பகுதியில் இவ்வாரத்தில் உதவிகள் வழங்கப்படும்.
எதிர்வரும் சனிக்கிழமைக்குள் அனைத்து தற்காலிக நிவாரண மையங்களிலும் உதவி விநியோகத்தை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, நிவாரண மையங்களுக்குச் செல்லாமல் வீடுகளிலேயே தங்கியுள்ள வெள்ளப் பாதிக்கப்பட்டவர்களும் உதவிகள் வழங்கப்படவுள்ளன. அவர்கள் கிராமத் தலைவர்கள் அல்லது சம்பந்தப்பட்ட பகுதிகளின் பெங்கூலு அதிகாரிகள் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். இருப்பினும், நிவாரண மையங்களில் தங்கியிருப்போருக்கு வழங்கப்படும் தொகையில் பாதி மட்டுமே இவர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களுக்கு கூடுதல் சிறப்பு ரொக்க உதவியாக தலா RM2,500 வழங்கப்படும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
இதனிடையே, கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இன்று நண்பகல் நிலவரப்படி, 294 குடும்பங்களைச் சேர்ந்த 1,083 பேர் ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
முன்னதாக 13 நிவாரண மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில், வெள்ளநீர் வடிந்து வருவதால் அவற்றின் எண்ணிக்கை தற்போது ஆறாகக் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது.







