ஷா ஆலாம், நவ. 28 – சரவாக்கின் 13-ஆவது மாநிலத் தேர்தலில், கபுங்கான் பார்ட்டி சரவாக் (GPS) கட்சியைச் சேர்ந்த சுமார் 30 வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளதாக மாநில முதலமைச்சர் தான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி அபாங் ஓபெங் தெரிவித்துள்ளார்.
எனினும், போட்டியின்றி வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், GPS கூட்டணியின் தலைவரான அபாங் ஜோஹாரியும் கெடோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றிகள், மாநிலத்தை நிர்வகிப்பதில் GPS அரசின் மீது சரவாக் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, 2030-ஆம் ஆண்டுக்கான கோவிட்-19 பின்னரான மேம்பாட்டு வியூகம் (PCDS 2030) மூலம் மாநிலத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலத்தை நிர்வகிக்கும் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் உரிமை மக்களிடமே இருப்பதாகக் குறிப்பிட்ட அபாங் ஜோஹாரி, சரவாக்கில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருப்பதாகத் சொன்னார்.
இதற்கிடையில், மாநிலத்தில் நிலவும் அரசியல் நிலைத்தன்மை வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன், உள்ளூர் மக்களின் பொருளாதார நடவடிக்கைகளையும் விரிவுபடுத்த உதவும் என்றார் அவர்.
சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க முடிவெடுத்த ஒற்றுமை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்த முடிவு மத்திய அரசுக்கும் சரவாக் மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.







