ஷா ஆலாம், நவ.13: சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, 350 குடும்பங்களைச் சேர்ந்த 1,301 பேர் 9 தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) அடைக்கலம் பெற்றுள்ளனர்.
கோலா சிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 1,180 பேராகப் பதிவாகியிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
சமூக நலத்துறையின் (JKM) இணையத்தளத் தரவுகளின்படி, கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் மட்டும் 345 குடும்பங்களைச் சேர்ந்த 1,288 பேர் 6 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் நேற்று திறக்கப்பட்ட ஒரு தற்காலிக நிவாரண மையத்தில், 5 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் தங்கியுள்ளனர்.
இதனிடையே, பேராக் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஹிலிர் பேராக் மாவட்டத்தில் உள்ள இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் 83 குடும்பங்களைச் சேர்ந்த 288 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, பேராக்கில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 306 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதற்கிடையில் சரவாக்கில் இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36-ஆகப் பதிவாகியுள்ளது. கூச்சிங் மற்றும் மிரி மாவட்டங்களைச் சேர்ந்த 6 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
நேற்று 35 பேராக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று மேலும் ஒருவரால் அதிகரித்துள்ளது.






