கூச்சிங், அக். 28 — சரவாக், கூச்சிங்கில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவரைக் கோடரியால் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 16 வயது மாணவரின் மனநல மருத்துவ மதிப்பீட்டு அறிக்கைக்காகக் காவல்துறை காத்திருக்கிறது.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், மாணவரின் மனநிலை குறித்து அறிக்கை கிடைக்கும் வரை எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது என இன்று மாநிலக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சரவாக் மாநிலப் பொறுப்புக் காவல் ஆணையர் டிசிபி சைஃபுல்லிசான் இஷாக் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பான காவல்துறை விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேல் நடவடிக்கைக்காக விசாரணை ஆவணங்கள் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி சரவாக் மாநிலத் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், பாதுகாவலர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சந்தேக நபரின் பெற்றோர் உள்ளிட்ட 38 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கைப்பற்றப்பட்ட கோடரி, கத்தி, வெடிப்பட்டாசுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், சந்தேக நபரின் வீட்டிலிருந்து பெறப்பட்ட கணினிகள் மற்றும் மின்னணுச் சாதனங்களும் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு மாணவர்களிடையிலான பகடிவதை அல்லது துன்புறுத்தல் காரணமாக இருந்ததா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், இதுவரை பகடிவதையுடன் இந்தச் சம்பவத்தைத் தொடர்புபடுத்தும் எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என சைஃபுல்லிசான் குறிப்பிட்டார்.
இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 324ஆவது பிரிவு மற்றும் 1958ஆம் ஆண்டின் வெடி பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் 6(1)ஆவது பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி காலை சுமார் 7.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 42 வயதுடைய பெண் ஆசிரியரின் இடது கையில் காயம் ஏற்பட்டது.







