ஊழல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்

28 நவம்பர் 2026, 2:09 AM
ஊழல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர்

புத்ராஜெயா, நவ.28 – ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது எவ்விதத் தயக்கமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் பாதுகாப்புப் படைகளின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் பிரதமர் மற்றும் அரசு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றாலும், அதற்காகத் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என அவர் உறுதிபடக் கூறினார்.

நேற்று இரவு புத்ராஜெயாவில் உள்ள செரி பெர்டானா வளாகத்தில் நடைபெற்ற மடாணி அறிவுப் பேரவையில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

1MDB, FELDA, தபோங் ஹாஜி மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் உள்ளிட்டவற்றில் ஊழலுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பல்வேறு சவால்கள் உருவாகலாம். இருப்பினும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்படாது என அன்வார் குறிப்பிட்டார்.

குறிப்பாக, நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தற்காப்புப் படைகள் உயரிய நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

ராணுவ விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்துவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, அண்மையில் அரசு மலேசிய விமானப்படையான TUDM-இன் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தையும் அன்வார் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 17-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் லாபுவான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கையின்போது, TUDM அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்நடவடிக்கையில் 96.64 கிலோகிராம் ஷாபு எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளும், 6.98 கிலோகிராம் இரசாயனப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM4.83 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் தற்போது நிலவும் அமைதி மற்றும் பாதுகாப்புச் சூழலைக் கண்டு பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும், சர்வதேச புவிசார் அரசியல் நிலவரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

உலகின் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்கள் மலேசியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இத்தகைய சூழல்களை மக்கள் புரிந்துகொள்வது அவசியம் என அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எதிர்பாராத வகையில் பல்வேறு சர்வதேச மோதல்கள் உருவானதைச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள நாடு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.