ஷா ஆலாம், அக். 28 — கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த மூன்று போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைப் போலீசார் முறியடித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட ஒன்பது சோதனைகளில், சுமார் 394 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு RM2.15 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் இதனைத் தெரிவித்தார்.
கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN), செராஸ் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து மேற்கொண்ட சோதனையில், 21 முதல் 40 வயதுக்குட்பட்ட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
முதல் கட்ட நடவடிக்கையில், சுங்கை பெசி, செராஸ் மற்றும் பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 4 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 10 ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக ஃபாடில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 20ஆம் தேதி இரண்டாவது கட்டமாக சுங்கை பெசி, தாமான் ஸ்ரீ எண்டா, அம்பாங் மெவா மற்றும் புக்கிட் பிந்தாங் ஆகிய பகுதிகளில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மேலும் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூன்றாவது சோதனை நடவடிக்கை அக்டோபர் 22ஆம் தேதி பூடு பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டது.
மூன்று நடவடிக்கைகளிலும் மொத்தம் 393.965 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் மதிப்பு RM2,153,847 எனக் கணக்கிடப்பட்டது.
ஒருவருக்கு 0.3 கிராம் என்ற அளவிலான பயன்பாட்டைக் கணக்கில் கொண்டால், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 13.1 லட்சம் பேருக்கு விநியோகிக்கப் போதுமானதாக இருந்திருக்கும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், கூடுதல் கைதுகள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அறிந்தவர்கள், விசாரணைக்கு உதவ JSJN சிறப்பு உதவி எண்ணான 012-208 7222 தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.







