ஷா ஆலாம், நவ.20: குற்றச்செயல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், ராணுவ வீரர்கள் உட்பட எந்தவொரு பாதுகாப்புப் படை உறுப்பினரும் தங்களது சீருடை அல்லது பதவியைப் பயன்படுத்திச் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாது என்று தற்காப்புத்துறை ஆய்வாளர் சாக்கி சாலே வலியுறுத்தினார்.
சுபாங் விமானப்படைத் தளத்தில் ராணுவ விமானப் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி RM4.83 மில்லியன் மதிப்பிலான 96.64 கிலோகிராம் போதைப்பொருட்களைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதன் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ராணுவச் சொத்துகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் தனிப்பட்ட நலன்களுக்காகவோ சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான, வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் சாக்கி.
அதேவேளையில், சந்தேகத்திற்கிடமான பயணப் பொதிகளைக் கண்டறிந்து கடத்தல் முயற்சியை முறியடித்த விமானப்படை பாதுகாப்புப் பணியாளர்களின் விழிப்புணர்வையும் அவர் பாராட்டினார்.
தனிப்பட்ட சில உறுப்பினர்களின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த விமானப்படையையும் குற்றம் சாட்டக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், நவம்பர் 17-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் லாபுவான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அரசு மலேசிய விமானப்படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் உட்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆறு பேர் பொதுமக்கள் ஆவர்.
சுபாங் விமானப்படைத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மெத்தாம்பெட்டமின், ஆம்பெட்டமின் மற்றும் MDMA உள்ளிட்ட 96.64 கிலோகிராம் போதைப்பொருட்களுடன், 6.98 கிலோகிராம் இரசாயனத் திரவமும் கண்டுபிடிக்கப்பட்டதாக விமானப்படைத் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முஹமட் நோராஸ்லான் ஆரிஸ் தெரிவித்தார்.
மேலும், ராணுவச் சொத்துகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 28 மற்றும் 48 வயதுடைய விமானப்படை உறுப்பினர்கள் இருவர், ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தீபகற்ப மலேசியாவிலிருந்து சபாவுக்குப் போதைப்பொருட்களைக் கொண்டு சென்று பின்னர் அனைத்துலகச் சந்தைகளுக்கு விநியோகிக்கத் திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.








