96.2 கிலோ போதைப்பொருள் கடத்தல்: TUDM அதிகாரிகள் மூவர் உட்பட அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

27 நவம்பர் 2026, 3:40 AM
96.2 கிலோ போதைப்பொருள் கடத்தல்: TUDM அதிகாரிகள் மூவர் உட்பட அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
96.2 கிலோ போதைப்பொருள் கடத்தல்: TUDM அதிகாரிகள் மூவர் உட்பட அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஷா ஆலாம், நவ.27 – அரசு மலேசிய விமானப்படைக்குச் (TUDM) சொந்தமான தளவாடங்களைப் பயன்படுத்தி 96.2 கிலோகிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளைக் கடத்தியதாக மூன்று விமானப்படை அதிகாரிகள் உட்பட அறுவர் இன்று ஷா ஆலாம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

குற்றச்சாட்டப்பட்டவர்களில் 33 வயதான லெப்டினன்ட் அமீர் அரிஃபுடின் அமினுல்லா, 27 வயதான லெப்டினன்ட் முகமட் அரிஃப் ஃபௌசான் முகமட் அலி, 34 வயதான கேப்டன் முகமட் அமிருல் ஃபைசால் ரோஸ்டின் ஆகிய மூன்று விமானப்படை அதிகாரிகளும், 48 வயதான டான் சுய் செங், 28 வயதான நூர் ஹனிஸ் சியாஃபிகா முகமட் அமின் மற்றும் 34 வயதான அஃபிபா அம்டாஸ் ஆகிய மூன்று பொதுமக்களும் அடங்குவர்.

மஜிஸ்திரேட் வான் நூரா நிசா நகாதிரின் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவை தங்களுக்குப் புரிந்ததாக அறுவரும் தெரிவித்தனர். எனினும், வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், அவர்களிடமிருந்து குற்ற ஒப்புதல் அல்லது மறுப்பு வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த நவம்பர் 17-ஆம் தேதி சுபாங் அரசு விமானப்படைத் தளத்தில் (Pangkalan TUDM Subang), ஆறு பேரும் கூட்டாக இணைந்து 96.2 கிலோகிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குற்றம் 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 39B பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். ஆயுள் தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் 15 பிரம்படிகளும் வழங்கப்படலாம்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 17-ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் லாபுவான் பகுதிகளில் காவல்துறை மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது, விமானப்படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்நடவடிக்கையில் 96.64 கிலோகிராம் ஷாபு எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளும், 6.98 கிலோகிராம் இரசாயனப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 4.83 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விமானப்படை அதிகாரிகள் உட்பட ஆறு பேர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடரவுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.