போக்குவரத்து அமைச்சராக லோக் மீண்டும் பணிகளைத் தொடர பிரதமர் வலியுறுத்து

28 நவம்பர் 2026, 7:32 AM
போக்குவரத்து அமைச்சராக லோக் மீண்டும் பணிகளைத் தொடர பிரதமர் வலியுறுத்து

சிரம்பான், நவ.28 – போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உடனடியாகத் தமது அமைச்சு பணிகளை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

அந்தோணி லோக் பதவி விலகுவதற்கு முன்வைத்த காரணங்களைத் தாம் மதிப்பதாகவும், இருப்பினும் மக்களுக்கும் நாட்டிற்கும் சேவையாற்ற வேண்டிய பொறுப்பே முதன்மையானது என அன்வார் தெரிவித்தார்.

அந்தோணி லோக்கின் அமைச்சுப் பணிகள் சிறப்பாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், அதனால்தான் அவரது பதவி விலகல் முன்மொழிவை ஏற்றுக்கொள்வது தமக்குக் கடினமாக இருப்பதாகக் கூறினார்.

தற்போது விடுமுறையில் இருக்கும் அந்தோணி லோக்கை மீண்டும் பணிக்குத் திரும்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் விமான, கடல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து உட்கட்டமைப்புகள் மூலம் பல்வேறு பகுதிகளை இணைப்பதில் போக்குவரத்து அமைச்சு முக்கியப் பங்காற்றி வருவதாகவும், இது நாட்டின் வியூக ரீதியிலான முக்கிய அமைச்சுகளில் ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நெகிரி செம்பிலான், பாரோய் இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற 'யாகின் மடாணி – மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அர்த்தம் அளித்தல்' நிகழ்ச்சியில் உரையாற்றியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 10-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் வகையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அந்தோணி லோக் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

எனினும், ஜனநாயகச் செயல் கட்சியின் (DAP) பொதுச் செயலாளருமான அந்தோணி லோக்கும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் அன்வார் தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அந்தோணி லோக் மீண்டும் போக்குவரத்து அமைச்சுப் பொறுப்பை ஏற்று நாட்டுக்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்பதே தமது விருப்பம் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.