ராணுவச் சொத்துகள் மூலம் போதைப்பொருள் கடத்தல்: முழுமையான விசாரணைக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் வலியுறுத்து

20 நவம்பர் 2026, 9:40 AM
ராணுவச் சொத்துகள் மூலம் போதைப்பொருள் கடத்தல்: முழுமையான விசாரணைக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் வலியுறுத்து
ராணுவச் சொத்துகள் மூலம் போதைப்பொருள் கடத்தல்: முழுமையான விசாரணைக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் வலியுறுத்து

ஷா ஆலாம், நவ.20: ராணுவச் சொத்துகள் மற்றும் விமானப்படை வசதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை நிகழ்ந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, அரசு மலேசிய விமானப்படை (TUDM) மற்றும் தற்காப்பு அமைச்சு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙா வலியுறுத்தினார்.

கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சுபாங் விமானப்படைத் தளத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருப்பது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஶ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினருமான அவர், போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவித்ததுடன், நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன்னதாக, சுபாங் மற்றும் லாபுவான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் விமானப்படையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் உட்பட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமானின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்தது.

இதற்கிடையில், சுபாங் விமானப்படைத் தளத்தில் பாதுகாப்புச் சோதனைக்கான ஒட்டுவில்லைகள் இல்லாத ஐந்து பயணப் பொதிகள் பாதுகாப்புப் பணியாளர்களின் சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மெத்தாம்பெட்டமின், ஆம்பெட்டமின் மற்றும் MDMA உள்ளிட்ட 96.64 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றின் மதிப்பு RM4.83 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விமானப்படைத் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முஹமட் நோராஸ்லான் ஆரிஸ் வெளியிட்ட தகவலின்படி, பாதுகாப்புப் பணியாளர்களின் விழிப்புணர்வும் எக்ஸ்-ரே பரிசோதனையும் இந்தக் கடத்தல் முயற்சியைக் கண்டறிய உதவியுள்ளன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.