ஷா ஆலாம், நவ.20 – சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இன்று காலை 8.50 மணி நிலவரப்படி 1,874-ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 513 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் நான்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 1,652 பேராக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று மேலும் 222 பேரால் அதிகரித்துள்ளது. அதேபோல், நிவாரண மையங்களின் எண்ணிக்கையும் 11-இல் இருந்து 14-ஆக உயர்ந்துள்ளது.
சமூக நலத்துறையின் (JKM) தகவலின்படி, கோலா சிலாங்கூர், கிள்ளான், கோலா லங்காட் மற்றும் கோம்பாக் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் கோலா சிலாங்கூரில் அதிகபட்சமாக ஏழு நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், செப்பாங், கோலா லங்காட் மற்றும் கோம்பாக் மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ள அபாயமுள்ள இடங்களில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய வெள்ள முன்னறிவிப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை மாலை முதல் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 11.59 மணி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வானிலை மற்றும் நீர்மட்ட மாற்றங்களைக் கண்காணித்து, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








