ஷா ஆலாம், நவ 25 : சிலாங்கூரில் இன்று 96 மில்லிமீட்டர் வரை பதிவாகிய கனமழை காரணமாக , மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 8 பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
செப்பாங்கில் ஆறு பகுதிகளும், கோலா லங்காட் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் நீர்ப்பாசன - வடிகால் துறை தெரிவித்தது.
பல பகுதிகளில் 33 முதல் 96 மில்லிமீட்டர் வரையிலான மழையளவு பதிவானதால், ஆறுகள் மற்றும் வடிகால் அமைப்புகளில் நீர் நிரம்பி வழிந்ததாக அத்துறை கூறியது.
செப்பாங்கில், 88.5 மி.மீ மழை பதிவான பத்து 31 டெங்கில் (Batu 31 Dengkil), புலாவ் மெராந்தி (68 மி.மீ), கம்போங் டேசா புத்ரா (96 மி.மீ) மற்றும் கம்போங் சுங்கை மெராப் (95 மி.மீ) ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், 57 மி.மீ மழை பதிவான கம்போங் ஸ்ரீ தஞ்சோங், கம்போங் லாலாங், கம்போங் அம்பார் தெனாங், கம்போங் செமாராங் ஆகிய பகுதிகளும், 30.5 மி.மீ மழை பதிவான KIWA FT29/FT32 சந்திப்பும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
கோலா லங்காட்டில் உள்ள RTB புக்கிட் சாங்காங் பகுதியில் 95 மி.மீ மழையும், உலு லங்காட்டில் உள்ள கம்போங் சுங்கை ராமால் டாலம் பகுதியில் 58.5 மி.மீ மழையும் பதிவாகியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெள்ள நீரை விரைவாக வெளியேற்றுவதற்காக சிலாங்கூர் நீர்ப் பாசன வடிகால் துறை நீர் இறைக்கும் இயந்திரங்களை (பம்புகள்) இயக்கியுள்ளது.
RTB புக்கிட் சாங்காங்கில் ஒரு நிரந்தரப் பம்ப், இரு நடமாடும் பம்புகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், RTB புக்கிட் சாங்காங் மற்றும் லபுஹான் டாகாங் ஜாலான் பெங்காலான் 1 ஆகிய இடங்களில் கூடுதலாக மூன்று நடமாடும் பம்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், செப்பாங்கின் கம்போங் ஸ்ரீ தஞ்சோங்கில் ஒரு நீர்க் கதவு (pintu air), ஒரு நிரந்தரப் பம்ப் மற்றும் இரு நடமாடும் பம்புகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ள நீரை வெளியேற்ற உதவுவதற்காக KIWA FT29/FT32 சந்திப்பிலும் மேலும் இரு நடமாடும் பம்புகள் இயக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், வெள்ளத்தின் பாதிப்புகளையும் அபாயங்களையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சிலாங்கூர் நீர்ப் பாசன வடிகால் துறை தெரிவித்தது.
மேலும் விவரங்கள் தேவைப்படும் பொதுமக்கள் 03-5544 7376 என்ற சிலாங்கூர் நீர்ப் பாசன வடிகால் துறையின் ( JPS) அவசர உதவி எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம்.







