ஷா ஆலாம், நவ.28 – செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் செய்திகளைத் தயாரிப்பது எளிதாகியுள்ளது.
எனினும் தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதிலும் நம்பகமான ஆதாரங்களை உறுதிப்படுத்துவதிலும் ஊடகவியலாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
MSU பல்கலைக்கழகத்தின் ஒலிபரப்புத் துறை மற்றும் மக்கள் தொடர்புத் துறை பாடத்திட்டங்களின் மேலாளர் நூர் கலீடா முகமட் யூஸ்ரி இதனைத் தெரிவித்தார்.

டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், தகவல்களை விரைவாகச் சேகரித்து செய்திகளைத் தயாரிக்க முடிகிறது.
இருப்பினும், தவறான செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தகவலையும் முறையாகச் சரிபார்த்து, அதன் மூல ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நடைபெற்ற 'Next GenZ Media Selangor' நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊடகத் துறையில் தொழில்நுட்பத் திறன்கள் மட்டுமின்றி ஆழமான ஆய்வு, துல்லியமான தகவல் சேகரிப்பு மற்றும் தொழில்முறைப் பொறுப்புணர்வும் முக்கியமானவை என்றார்.
கடந்த நவம்பர் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் MSU பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 மாணவர்கள் தங்களது விரிவுரையாளர்களுடன் மீடியா சிலாங்கூர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
ஊடக நிறுவனங்களின் செயல்பாடுகள், செய்தி தயாரிப்பு நடைமுறைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஊடகத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாணவர்களுக்கு நேரடி அனுபவத்தை வழங்குவது இதன் நோக்கமாகும்.

இதற்கிடையில், MSU மாணவி சாரா காலிட், தகவல்களைச் சேகரிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு உதவியாக இருந்தாலும், மாணவர்கள் அதனை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
AI மூலம் பெறப்படும் தகவல்களை நம்பகமான செய்தி ஆதாரங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்த பின்னரே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில், செயற்கை நுண்ணறிவால் ஊடகவியலாளர்களின் பணிகளை முழுமையாகப் ஈடு செய்ய முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
சம்பவ இடங்களுக்கு நேரடியாகச் சென்று தகவல்களைச் சேகரிப்பதும், முதன்மை ஆதாரங்களிடமிருந்து விவரங்களைப் பெறுவதும் ஊடகவியலாளர்களின் முக்கியப் பொறுப்புகள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே, செயற்கை நுண்ணறிவைச் செய்தித் தயாரிப்பில் பயன்படுத்தும்போது தகவல்களின் துல்லியம், அனுபவம் மற்றும் தொழில்முறைப் பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.








