அனைத்துப் பகுதி மக்களுக்கும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியா சிலாங்கூர் தீவிரம்

7 ஜூன் 2026, 9:32 AM
அனைத்துப் பகுதி மக்களுக்கும் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியா சிலாங்கூர் தீவிரம்

கோலாலம்பூர், ஜூன் 7 – சிலாங்கூர் மாநிலத்தின் உள்ளூர் விவகாரங்கள் மற்றும் பிராந்தியச் செய்திகளுக்குத் தகுந்த முக்கியத்துவம் வழங்குவதன் மூலம், பொதுமக்களுக்கு என்றும் பயனுள்ள ஒரு முதன்மைத் தகவல் ஊடகமாக மீடியா சிலாங்கூர் நிறுவனம் தனது பங்கைத் தொடர்ந்து வலுப்படுத்தும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ஃபரீட் முகமட் அஷாரி தெரிவித்துள்ளார்.

செய்திச் சேகரிப்புகள் மற்றும் செய்திக் கட்டுரைகள் என்பவை நகர்ப்புறங்களை மட்டுமே மையமாகக் கொண்டு அமைந்துவிடக் கூடாது என்றும், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும், குறிப்பாகப் புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக அவை விரிவடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியின் (PBAKL 2026) ஒரு பகுதியாக, சிலாங்கூர் பெவிலியனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் அவர், "சிலாங்கூர் மாநிலத்தைப் பற்றிப் பேசும்போது நாம் பெரும்பாலும் சில பகுதிகளைக் கவனிப்பதே இல்லை என்றார்.

பொதுவாகச் சிலாங்கூர் என்றாலே பலருக்கும் பெட்டாலிங் ஜெயா, டாமன்சாரா, ஷா ஆலம், சுபாங் போன்ற நகரங்கள் மட்டும்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால், உண்மையில் நமது சிலாங்கூர் மாநிலமானது வடக்கே சபாக் பெர்ணம் முதல் தெற்கே சிப்பாங் வரை மிகப்பரந்து விரிந்து கிடக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது," என சுட்டிக்காட்டினார்.

இத்தகைய உள்ளூர் விவகாரங்களை மையமாகக் கொண்ட செய்தி அணுகுமுறையானது, சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூர் போன்ற புறநகர்ப் பகுதிகளில் வாழும் மக்கள், தங்களுக்குத் தேவையான முக்கியத் தகவல்களையும் அரசாங்கத்தின் செய்திகளையும் உடனுக்குடன் பெறுவதை உறுதி செய்வதற்கும், அவர்கள் செய்தித் தொடர்பில் பின்தங்கி விடுவதைத் தடுப்பதற்கும் மிகவும் இன்றியமையாதது என்று அவர் விவரித்தார்.

மேலும், கடந்த கோவிட்-19 பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு உலகளாவிய ஊடகத் துறை மிகக் கடுமையான மற்றும் அதிவேக மாற்றங்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட முகமட் ஃபரீட், பெரும்பாலான முன்னணி ஊடக நிறுவனங்கள் தற்போது செய்தி இணையத்தளங்கள், காணொளிகள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களை நோக்கி வேகமாக மாறி வருவதாகக் கூறினார்.

"நாம் பொதுவான ஊடக நிலவரத்தைக் கவனித்தோமானால், தி ஸ்டார், சினார் ஹரியான், பெரித்தா ஹரியான் உள்ளிட்ட மலேசியாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் பலவும் தங்களின் அச்சுப் பிரதிகளின் எண்ணிக்கையைக் பெருமளவில் குறைத்துக் கொண்டுள்ளன.

நமது மீடியா சிலாங்கூர் நிறுவனமும் கூட இந்த அச்சுப் பதிப்பைக் குறைத்துள்ளது. இதற்குக் காரணம், அச்சுக்கான செலவினங்களையும் மனித ஆற்றலையும் குறைத்து, அவற்றை டிஜிட்டல் வடிவத்திலான செய்திகள், காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளை உருவாக்குவதில் நாங்கள் அதிகமாக முதலீடு செய்து வருகிறோம்," என்று அவர் விளக்கினார்.

மாறிவரும் இந்த ஊடகத் துறைத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மீடியா சிலாங்கூர் நிறுவனம் தன்னை எப்போதும் மேம்படுத்தி கொள்ளும் என்றும், அதன் மூலம் மாநில மக்களுக்குத் துல்லியமான தகவல்களை மிக வேகமாகவும், உடனுக்குடனும் கொண்டு சேர்ப்பதோடு, உள்ளூர் சமூகத்திற்கு மிக நெருக்கமான ஓர் ஊடகமாக என்றும் திகழும் என முகமட் ஃபரீட் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.