மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 24 மணி நேரத்தில் அனுமதி; 276 வேலை நாட்கள் காத்திருப்பு குறைப்பு: MBPJ

24 நவம்பர் 2026, 9:25 AM
மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 24 மணி நேரத்தில் அனுமதி; 276 வேலை நாட்கள் காத்திருப்பு குறைப்பு: MBPJ

பெட்டாலிங் ஜெயா, நவ.24 – பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் (MBPJ) கீழ் மேற்கொள்ளப்படும் சிறிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 24 வேலை நேரங்களுக்குள் அனுமதி வழங்கும் வகையில் ‘PA24 Plus’ எனும் புதிய முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், இதற்கு முன்னர் அதிகபட்சம் 276 வேலை நாட்கள் வரை எடுத்துக்கொண்ட அனுமதி நடைமுறை வெறும் 24 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய முயற்சியின் கீழ், திட்டமிடல் அனுமதி (Planning Permission), நில அகழ்வு மற்றும் சமன்படுத்தும் திட்டங்கள் (Earthworks Plans), சாலை மற்றும் வடிகால் திட்டங்கள் (Road and Drainage Plans), கட்டடத் திட்டங்கள் (Building Plans) ஆகிய நான்கு வகையான அனுமதிகளும் ஒரே நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும்.

இதற்கு முன்னர் 43 கட்டங்களைக் கொண்டிருந்த அனுமதி நடைமுறை தற்போது 10 முக்கிய கட்டங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் யாசிட் சாய்ரி தெரிவித்தார்.

ஆலோசகர்களின் விதிமுறை இணக்கத்தை உறுதிப்படுத்துதல், ஆவணங்களை ஒரே தரநிலைக்கு உட்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் ஆவணங்களைப் பரிசீலித்தல் ஆகியவை இந்த மாற்றத்திற்குத் துணைபுரிகின்றன.

இந்த முன்னெடுப்பின் மூலம் ஆண்டுதோறும் சுமார் RM6.51 மில்லியன் நிர்வாகச் செலவுகளைச் சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகளுக்கான ஒட்டுமொத்த கால அவகாசத்தையும் 24 மாதங்களிலிருந்து 15 மாதங்களாகக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை (நவம்பர் 18), கிரிஸ்டல் கிரவுன் ஹோட்டலில் மலேசிய உற்பத்தித்திறன் கழகத்தின் (MPC) தலைமை இயக்குநர் முகமட் நோர்ஜாயாடி தாமாம், PA24 Plus திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த முன்னெடுப்பு அரசாங்கத்தின் அதிகாரத்துவ நடைமுறைகளைக் குறைத்து, பொதுச் சேவைகளை விரைவுபடுத்தும் சீர்திருத்தக் கொள்கைக்கு வலுசேர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விண்ணப்ப நடைமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் மேம்பாட்டாளர்களின் செலவுகளைக் குறைத்து, முதலீட்டுச் சூழலையும் நாட்டின் பொருளாதாரப் போட்டித்தன்மையையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.