ஷா ஆலாம், அக். 19 – ஜாலான் PJU 1A/46-இல் அமைந்துள்ள லெம்பா சுபாங் 1 மக்கள் குடியிருப்புத் திட்டத்தில் (PPRT) கடந்த அக்டோபர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் (MBPJ) உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, கட்டுமானக் கழிவுகள், குப்பைகள் மற்றும் வடிகாலில் தேங்கியிருந்த மண் ஆகியவை நீரோட்டத்தைத் தடுத்திருப்பது கண்டறியப்பட்டதாக MBPJ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மழைநீர் முறையாக வெளியேற முடியாமல் வடிகால் அமைப்பில் அடைப்பு ஏற்பட்டு, நீர் நிரம்பி வழியும் அபாயம் அதிகரித்திருக்கலாம்.
அதனால், அதே நாளில் வடிகால் அமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொண்டு, நீரோட்டத்தை மேம்படுத்துவதற்கும் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்தது.
மேலும், அப்பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் உள்கட்டமைப்பு ஒப்பந்ததாரருக்கு, வடிகால்களைத் தவறாமல் சுத்தம் செய்யுமாறும், கட்டுமானப் பொருட்கள் வடிகால் நீரோட்டத்திற்குத் தடையாக இருக்காமல் உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலை மேம்பாட்டுப் பணிகள் முழுமையடையும் வரை வடிகால் அமைப்பில் குப்பைகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் குவிவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒப்பந்ததாரர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என MBPJ தெரிவித்தது.
மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்து, அப்பகுதி மக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் பேணுவதில் நகராண்மைக் கழகம் கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.







