ஷா ஆலாம், நவ. 12 – சிலாங்கூரில் வேகமாக வளர்ந்து வரும் தரவு மையத் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நீர் மற்றும் மின்சார விநியோகத்தை நீண்டகால அடிப்படையில் திட்டமிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தரவு மையங்களின் அதிகரிப்பால் எதிர்காலத்தில் நீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற (MBPJ) மண்டலம் 12 உறுப்பினர் கே. தயாளன் தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் தரவு மையங்களின் அதிகரிக்கும் மின்சாரம் மற்றும் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்காக சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதுடன், மழைநீர் மற்றும் வெள்ளநீரைச் சேகரித்து மறுசுழற்சி செய்து தரவு மையங்களின் குளிரூட்டும் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும் என அவர் முன்மொழிந்தார்.
தரவு மையத் தொழில்துறை பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய முதலீடுகளுக்கும் வாய்ப்புகளை உருவாக்கினாலும், அதன் வளர்ச்சி பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளையும் இயற்கை வளங்களையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என தயாளன் வலியுறுத்தினார்.
கடந்த நவம்பர் 10-ஆம் தேதி MBPJ தலைமையகத்தில் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் தரவுச் சேமிப்புச் சேவைகளுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தரவு மைய மேம்பாட்டை சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ந்து வரும் புதிய பொருளாதாரத் துறைகளில் ஒன்றாக மாநில அரசு ஏற்கெனவே அடையாளம் கண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியையும் முதலீட்டு வாய்ப்புகளையும் ஊக்குவிக்கும் அதேவேளையில், நீர் மற்றும் மின்சார வளங்களைப் பாதுகாத்து, தரவு மையத் தொழில்துறையை நிலையான முறையில் மேம்படுத்துவது அவசியம் என்றும் தயாளன் குறிப்பிட்டார்.






