பெட்டாலிங் ஜெயா, நவ 10 : முதியோர்களைப் பராமரிக்கும் குடும்பங்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான சுமையைக் குறைப்பதே தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) மண்டலம் 12-இன் புதிய உறுப்பினர் கே. தயாளன் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயாவில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர்களின் ஆரோக்கியம், நலன் மற்றும் சமூக வாழ்க்கைக்கு ஆதரவு தேவைப்படுகிறது.
நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்குப் பிறகு அவர் மீடியா சிலாங்கூரிடம் பேசினார்.
முதியோர்களுக்கான வசதிகள் மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்த உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து சமூக அடிப்படையிலான சுகாதாரத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என்றார்.
மேலும், முதியோரைப் பராமரிக்கும் குடும்பங்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தாம் ஆதரவளிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் மாநகர் மன்ற உறுப்பினர் டெரன்ஸ் டான் டெக் செங் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரப்போவதாகவும், புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷ்யாகரனுடன் இணைந்து மாநகர் மன்றத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தப் போவதாகவும் தயாளன் உறுதியளித்துள்ளார்.







