சாலை விதிகளை மீறும் பாதசாரிகளை CCTV மூலம் அடையாளம் கண்டு அபராதம் விதிக்க பரிசீலனை: DBKL

24 நவம்பர் 2026, 8:57 AM
சாலை விதிகளை மீறும் பாதசாரிகளை CCTV மூலம் அடையாளம் கண்டு அபராதம் விதிக்க பரிசீலனை: DBKL

கோலாலம்பூர், நவ.24 – கோலாலம்பூரில் அனுமதிக்கப்படாத இடங்களில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளை கண்காணிப்பு கேமராக்களின் (CCTV) காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு அபராதம் விதிக்கும் திட்டத்தை கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (DBKL) பரிசீலித்து வருகிறது.

பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், ஆபத்தான முறையில் சாலையைக் கடக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் ஆராயப்படுவதாகப் பிரதமர் துறை (கூட்டரசுப் பிரதேசங்கள்) துணை அமைச்சர் டத்தோ லோ சூ ஃபுய் மக்களவையில் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் பாதசாரிகள் சம்பந்தப்பட்ட உயிரிழப்பு விபத்துகள் 2022-ஆம் ஆண்டில் 29 ஆகவும், 2023-ஆம் ஆண்டில் 21 ஆகவும், 2024-ஆம் ஆண்டில் 23 ஆகவும், 2025-ஆம் ஆண்டில் 20 ஆகவும் பதிவாகியுள்ளன.

ஜாலான் துன் பேராக், மஸ்ஜிட் ஜாமேக், ஜாலான் சுல்தான் இஸ்மாயில் மற்றும் செரி பெட்டாலிங் ஆகியவை அதிக விபத்து அபாயம் கொண்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் விபத்துகள் அதிகம் நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், வாகனங்களின் வேகத்தை மணிக்கு 30 கிலோமீட்டராகக் குறைக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள், சிறப்புப் பாதசாரிக் கடவைகள் மற்றும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கோலாலம்பூர் முழுவதும் 22 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தில் கூரையுடன் கூடிய பாதசாரி நடைபாதைகளை அமைக்க DBKL திட்டமிட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2026 டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இவ்வாண்டு இதுவரை போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 295,211 அபராத அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 2,655 வாகனங்கள் விதிமீறல்கள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் காரணமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. கைவிடப்பட்ட 1,404 வாகனங்களும் அகற்றப்பட்டுள்ளன.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும் DBKL, காவல்துறை (PDRM) மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) ஆகியவற்றுடன் இணைந்து தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.