2030-க்குள் பொது இடங்களில் 5,000 சிசிடிவி கேமராக்களைப் பொருத்த சிலாங்கூர் இலக்கு

13 நவம்பர் 2026, 10:22 AM
2030-க்குள் பொது இடங்களில் 5,000 சிசிடிவி கேமராக்களைப் பொருத்த சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலாம், நவ 13: விவேக தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டின் மூலம் மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், 2030-ஆம் ஆண்டிற்குள் சிலாங்கூர் முழுவதும் உள்ள பொது இடங்களில் 5,000 சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்த மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

சிலாங்கூரை ஒரு விவேக நகர் மாநிலமாக மாற்றும் இலக்கிற்கு ஏற்ப, தற்போதுள்ள சுமார் 2,000 சிசிடிவி கேமராக்களுடன் கூடுதலாக 3,000 கேமராக்களை இணைப்பதே இதன் இலக்காகும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதீன் ஷாரி தெரிவித்தார்.

"வெறும் கண்காணிப்பைத் தாண்டி, இந்தப் புதிய சிசிடிவி அமைப்பு விவேக பகுப்பாய்வுத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சிலாங்கூர் மாநிலத்தின் 'டிஜிட்டல் ட்வின்' (Digital Twin) தரவுகளை ஒருங்கிணைக்கிறது.

இது நகர்ப்புறச் சூழலை முழுமையாகவும் நிகழ்நேரத்திலும் (real-time) கண்காணிக்க வழிவகுக்கும்," என்று அவர் கூறினார்.

இன்று 2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த முயற்சியை நனவாக்கும் வகையில், மாநிலம் முழுவதும் சிசிடிவி வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு RM2.5 மில்லியன் நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, சம்பவங்களை முன்கூட்டியே கண்டறியும் திறனை மேம்படுத்தி, மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, தொடர் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அமிருடின் தெரிவித்தார்.

"இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் தரவு அடிப்படையிலான முடிவெடுக்கும் திறனை வலுப்படுத்த முடியும். இது மிகவும் திறமையான, பாதுகாப்பான, உடனுக்குடன் செயல்படும் மற்றும் நிலையான நகர நிர்வாகத்திற்குத் துணைபுரியும்," என்றும் அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.