மார்ச் மாதத்திற்குள் சிலாங்கூரில் 250 AI கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்

19 நவம்பர் 2026, 6:55 AM
மார்ச் மாதத்திற்குள் சிலாங்கூரில் 250 AI கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்

ஷா ஆலாம், நவ 19 : 2027 மார்ச் மாதத்திற்குள் சிலாங்கூர் மாநிலம் முழுவதும் கூடுதலாக 250 செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்புக் கேமராக்களை (CCTV) மாநில அரசாங்கம் பொருத்த உள்ளதாக இன்று நடைபெற்ற மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

வெள்ள அபாயம், சட்டவிரோதக் குப்பை கொட்டுதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, மார்ச் மாதத்திற்குள் இவற்றைப் பொருத்தும் பணிகள் நிறைவடையும் என்று இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் புத்தாக்கக் கலாச்சாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முஹமட் ஃபஹ்மி ங்கா தெரிவித்தார்.

கேள்வி-பதில் நேரத்தின்போது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த 250 கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள் ஊராட்சி மன்றங்கள் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையால் கூட்டாகத் தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.

தற்போது மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பு, வெள்ள அபாயம் மற்றும் சட்டவிரோதக் குப்பை கொட்டுவதைக் கண்காணிக்க 1,781 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவற்றில் 872 கேமராக்கள் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்டவை. புதிதாகப் பொருத்தப்படவுள்ள 250 கேமராக்களையும் சேர்த்து, 1,122 செயற்கை நுண்ணறிவுக் கேமராக்கள் உட்பட மொத்த கேமராக்களின் எண்ணிக்கை 2,031-ஆக உயரும்.

இது 2030-ஆம் ஆண்டிற்குள் 2,000 கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்ற சிலாங்கூரின் இலக்கை முன்கூட்டியே தாண்டும் சாதனையாகும்.

போக்குவரத்து நிர்வகிப்பைப் பொறுத்தவரை, சில குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து குறித்த தரவுகளைச் சேகரிக்க இக்கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இது தரவு அடிப்படையிலான போக்குவரத்து நிர்வகிப்பு அமைப்பிற்கு உதவும் என்றும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.

இருப்பினும், சிலாங்கூரில் உள்ள சாலைகள் பல்வேறு அதிகார வரம்புகளின் கீழ் வெவ்வேறு அமைப்புகளால் நிர்வகிக்கப்படுவதால், அத்தகைய அமைப்பைச் செயல்படுத்துவது சவாலாக உள்ளது.

ஒவ்வொரு சாலை நிர்வாகமும் போக்குவரத்து விளக்குகளின் நேரத்தை ஒழுங்குபடுத்தத் தனித்தனி கட்டுப்பாட்டுக் கருவிகளைக் கொண்டுள்ளதால், சிறந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு இந்த அனைத்து வன்பொருட்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று அவர் விளக்கினார்.

ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் வாகன எண் தகடுகளை அடையாளம் காணுதல், மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல், சட்டவிரோதக் குப்பை கொட்டுவதைக் கண்டறிதல், கழிவு மேலாண்மை கண்காணிப்பு, மற்றும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயங்களை முன்கூட்டியே கண்டறிதல் போன்ற திறன்களைக் கொண்டுள்ளன.

இக்கேமராக்கள் பதிவு செய்யும் தகவல்கள் மற்றும் காட்சிகள் உடனடி நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். குற்றச் செயல்கள் தொடர்பான காட்சிகள் விசாரணைக்காகக் போலீசுடனும், வெள்ள அபாயத் தரவுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகப் பேரிடர் நிர்வாக அமைப்புகளுடனும், சட்டவிரோதக் குப்பை கொட்டும் நடவடிக்கைகளின் பதிவுகள் அமலாக்க நடவடிக்கைகளுக்காக ஊராட்சி மன்றங்களுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.