ஷா ஆலாம், நவ.24 – குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு வழங்கும் சிலாங்கூர் மாநில அரசின் NutriSel திட்டம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்த மொத்தம் RM24 மில்லியன் ஒதுக்கப்படவுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இதற்கான நிதி ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாநில அரசுக்குச் சொந்தமான துணை நிறுவனங்களின் பங்களிப்பின் மூலம் திரட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், நடப்பாண்டில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், அடுத்த ஆண்டு ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகக் கூறினார்.
இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 100,000 தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் பயன்பெறவுள்ளனர். வாரத்திற்கு இரு முறை இலவச காலை அல்லது மதிய உணவு வழங்கப்படுவதுடன், குறிப்பாக மாத வருமானம் RM2,000-க்கும் குறைவாக உள்ள B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
நடப்பாண்டில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக RM14.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 962 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இதனிடையே, மாணவர்களின் ஊட்டச்சத்து ஆதரவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட Mega NutriSel திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், NutriSel SPM 2026 திட்டத்தின் கீழ் சிலாங்கூர் முழுவதும் உள்ள 256 பள்ளிகளைச் சேர்ந்த 71,152 எஸ்.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் தேர்வுக் காலத்திலும் ஊட்டச்சத்து நிறைந்த மதிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.








