அம்பாங், நவ.24 – அம்பாங் மருத்துவமனையின் அவசர மற்றும் விபத்துச் சிகிச்சைப் பிரிவில் மஞ்சள் மண்டலத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 25 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை (JKNS) தெரிவித்தது.
நோயாளிகளின் திடீர் வருகை அதிகரிப்பால் அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், வார்டுகளில் அனுமதிக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் நோயாளிகளின் காத்திருப்பு நேரமும் அதிகரித்துள்ளது.
இதனைச் சமாளிக்க, நோயாளிகளை வார்டுகளில் அனுமதிக்கும் நடைமுறைகள் மற்றும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் நோயாளிகளை வெளியேற்றும் செயல்முறைகளை விரைவுபடுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், வீடு திரும்புவதற்காகக் காத்திருக்கும் நோயாளிகளுக்கான Discharge Lounge வசதியைச் சிறப்பாகப் பயன்படுத்துவதுடன், மருத்துவமனையின் மனிதவள நிர்வாகத்தையும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே, மருத்துவமனையின் சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் வழங்கும் கருத்துகளையும் வரவேற்பதாக JKNS தெரிவித்தது.
நோயாளிகளின் பாதுகாப்பைப் பேணுவதுடன், பொதுமக்களுக்கு தரமான சுகாதாரச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் அத்துறை குறிப்பிட்டுள்ளது.







