ஷா ஆலாம், அக். 5 — அம்பாங், தாமான் லெம்பா மாஜுவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு 600 பகுதியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி டெங்கி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) மூன்று அபராதங்களை விதித்துள்ளது.
உலு லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் (PKDHL) இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, அந்தப் பகுதியில் 20 டெங்கி சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 638 வளாகங்கள் பார்வையிடப்பட்டன. அவற்றில் 137 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், மேலும் 501 வளாகங்கள் மூடப்பட்டிருந்ததாக MPAJ தெரிவித்துள்ளது.
ஆய்வின் முடிவில், பிளாக் C மற்றும் பிளாக் D ஆகிய பகுதிகளில் உள்ள நீர்த் தொட்டிகளில் டெங்கி கொசுக்கள் இனப்பெருக்கம் செய்த இரண்டு சம்பவங்களுக்கும், ஜாலான் மாஜு 2/3, எண் 34A-ல் இருந்த பெயிண்ட் தொட்டியில் கொசு இனப்பெருக்கம் கண்டறியப்பட்ட ஒரு சம்பவத்திற்கும் என மொத்தம் மூன்று அபராதங்கள் விதிக்கப்பட்டன.
இந்த டெங்கி தடுப்பு நடவடிக்கை பிளாக் A முதல் F வரையிலான பகுதிகள், ஜாலான் மாஜு 2/1 மற்றும் ஜாலான் மாஜு 2/3 குடியிருப்புப் பகுதிகள், அத்துடன் அருகிலுள்ள விளையாட்டு மைதானப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

நடவடிக்கையில் MPAJ-யின் 15 பணியாளர்கள், உலு லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் ஆறு அதிகாரிகள் மற்றும் டெர்மினெக்ஸ் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தின் பணியாளர்கள் பங்கேற்றனர்.
டெங்கி பரவலைத் தடுப்பதுடன், பொதுமக்களுக்கு தூய்மையான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உறுதி செய்வதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக MPAJ கூறியுள்ளது.






