ஷா ஆலாம், செப்.26 – கெலானா ஜெயா மற்றும் அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் ரயில் பாதைகளில் உள்ள நிலையங்களில் பிளாட்பார்ம் பாதுகாப்புத் தடுப்புகளைப் பொருத்தும் பணியை ரேபிட் கேஎல் தொடங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் பணிகள், முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட புத்ரா ஹைட்ஸ் நிலையத்தில் தற்போது 85 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் தடுப்புகளின் வடிவமைப்பு, பொருத்தும் முறை மற்றும் அதன் செயல்பாட்டு அம்சங்களை முதற்கட்டமாகச் சோதித்து, தேவையான மேம்பாடுகளைச் செய்து முடித்த பின்னர் மற்ற நிலையங்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தப்படும்.

எனினும், கெலானா ஜெயா பாதையில் உள்ள ஐந்து சுரங்கப்பாதை நிலையங்களுக்கு இந்தப் பணியில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையங்களில் ஏற்கனவே தானியங்கி மேடைத் திரைக் கதவு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.
பயணிகளுக்கு மேலும் பாதுகாப்பான பயணச் சூழலை உருவாக்க ரேபிட் கேஎல் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தடுப்புகளைப் பொருத்துவதும் ஒன்றாகும் என்றார் பிரச்சாரனா குழுமத்தின் செயல்பாட்டுத் தலைமை அதிகாரியும், இடைக்காலத் தலைவர் மற்றும் தலைமைச் செயலதிகாரியுமான டாக்டர் புரோடியுத் துட்.
பாதுகாப்புத் தடுப்புகள் பொருத்தும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படுவதுடன், ரயில் சேவைகள் வழக்கம்போல் சீராக இயங்குவதை உறுதி செய்யும் வகையில் அன்றாட பராமரிப்புப் பணிகளின் அட்டவணையுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் 2027ஆம் ஆண்டு மத்தியில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகளுக்கு நிலையங்களில் மேலும் பாதுகாப்பானதுடன் வசதியான பயணச் சூழலையும் ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.







