கோலாலம்பூர், நவ.24 – மலேசியாவின் தேசிய முன்னெச்சரிக்கை முறையான MySiren, இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தெரிவித்தது.
MySiren மூலம் பொதுமக்கள் எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யாமலும், கட்டணம் அல்லது சந்தா செலுத்தாமலும் தங்களது கைத்தொலைபேசிகளில் நேரடியாக அவசரகால எச்சரிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
Cell Broadcast System (CBS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 4G மற்றும் 5G வலைப்பின்னல்கள் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கைத்தொலைபேசிகளுக்கு ஒரே நேரத்தில் எச்சரிக்கைகள் அனுப்பப்படும். இணைய வசதி இல்லாவிட்டாலும் அல்லது வலைப்பின்னலில் நெரிசல் ஏற்பட்டிருந்தாலும் இந்த எச்சரிக்கையைப் பெற முடியும்.
வெள்ளம், சுனாமி, கடுமையான வானிலை, தீ விபத்துகள், அபாயகரமான இரசாயனப் பொருட்கள் தொடர்பான சம்பவங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அவசரநிலைகளின்போது இந்த முறை பயன்படுத்தப்படும்.
அதிகாரம் வழங்கப்பட்டுள்ள பேரிடர் நிர்வாக அமைப்புகள், அவசரநிலையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப ஆறு வகையான எச்சரிக்கைகளை வெளியிட முடியும். அவை தேசிய எச்சரிக்கை, அதிதீவிர எச்சரிக்கை, கடுமையான எச்சரிக்கை, காணாமல் போனோர் தொடர்பான எச்சரிக்கை, சோதனை எச்சரிக்கை மற்றும் பயிற்சி எச்சரிக்கை ஆகியவையாகும்.
இதனிடையே, இந்த முறையின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக நாடு தழுவிய எச்சரிக்கை சோதனை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.
மேலும், MySiren எச்சரிக்கை மூலம் கடவுச்சொல், வங்கிக் கணக்கு விவரங்கள், OTP அல்லது பணம் கோரப்படாது என்பதால், இதன் பெயரில் வரும் சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்திகள் மற்றும் இணைய இணைப்புகளை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் அதிதீவிர எச்சரிக்கைகளை கைத்தொலைபேசிகளில் செயலிழக்கச் செய்ய முடியாது. அவசரகால எச்சரிக்கைகள் உயிர்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால், சோதனை எச்சரிக்கையைத் தவிர பிற எச்சரிக்கை வசதிகளைச் செயல்பாட்டில் வைத்திருக்குமாறும் MCMC கேட்டுக்கொண்டுள்ளது.
MySiren தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை www.mcmc.gov.my/mysiren என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.







