ஷா ஆலாம், நவ 23 : நேற்று முன்தினம் இரவு மிரி, ஜாலான் பியாசாவ் (Jalan Piasau) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சாலை குண்டர்கள் ஒழிப்பு நடவடிக்கையின் போது, பெரோடுவா கான்சில் கார் ஒன்று சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரி மீது மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரவு 11 மணியளவில் அமலாக்க அதிகாரிகள் சாலைத் தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட கார் அதிவேகமாகவும், எதிர் திசையிலும் ஜாலான் பியாசாவ் கேம்ப் (Jalan Piasau Camp) நோக்கிச் சென்றதாக மிரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரிகள் விடுத்த உத்தரவை மதிக்காத கார் ஓட்டுநர், அமலாக்கப் பணியில் உதவிக் கொண்டிருந்த JPJ அதிகாரி மீது மோதியுள்ளார்.
"இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட அதிகாரியின் வலது கண் மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டு, மிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"அந்த அதிகாரியின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஜாலான் பியாசாவ் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பு சோதனையின் மூலம் போலீசார் அந்த வாகனத்தைக் கண்டறிந்து தடுத்து நிறுத்தினர் என்று முஹமட் ஃபர்ஹான் கூறினார்.
17 வயதுடைய கார் ஓட்டுநருடன், காரில் பயணித்த 19 வயது ஆண் மற்றும் 18 வயதுப் பெண் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
"முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும், சாலைத் தடுப்பு சோதனையிலிருந்து தப்பிக்க அவர் முயன்றதும் தெரியவந்தது.
"மேலும், இச்சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பெரோடுவா கான்சில் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்," என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட மூவருக்கும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும்,அவர்கள் மீது பழைய குற்றப் பதிவுகளும் இல்லை.
கொலை முயற்சி தொடர்பான குற்றவியல் சட்டப் பிரிவு 307-ன் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில், இம்மூவரையும் நவம்பர் 26-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.







