புத்ராஜெயா, செப் 24 - "ரோஹிங்கியாக்கள் ஓட்டுநர் உரிமம் பெற சாலை போக்குவரத்து துறை (JPJ) முன்மொழிகிறதா?" என்ற தலைப்பில், அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கை வடிவில் 'அலோங் ஆட்டோ பார்ட்ஸ்' (Along Auto Parts) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், வெளியிடப்பட்ட பதிவை ஜே.பி.ஜே மறுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்தத் தவறான தகவலைப் பரப்பியது குறித்து முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக, மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் (MCMC) அத்துறை புகார் அளித்துள்ளது.
"பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையிலும், ஜேபிஜே-வின் நம்பகத்தன்மையைக் கெடுக்கும் வகையிலும், துறையின் பெயர், அடையாளம் அல்லது படத்தைப் பயன்படுத்தி உள்ளடக்கங்களை உருவாக்குவது, மாற்றுவது அல்லது பரப்புவது போன்ற செயல்களை ஜேபிஜே மிகவும் தீவிரமாகக் கருதுகிறது," என்று அத்துறை இன்று தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
பெர்னாமா செய்தி நிறுவனம் 'அலோங் ஆட்டோ பார்ட்ஸ்' ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்தபோது, 12 மணி நேரத்திற்கு முன்பு பதிவேற்றப்பட்ட அந்தப் பதிவு இன்று காலை 9:15 மணி வரை நீக்கப்படவில்லை என்பதும், அதற்குள் 1,800-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் 325 பகிர்வுகளையும் அது பெற்றிருந்ததும் தெரியவந்தது.







