'H 1' பதிவு எண் RM10.78 மில்லியனுக்கு ஏலம்

22 செப்டெம்பர் 2026, 3:06 AM
'H 1' பதிவு எண் RM10.78 மில்லியனுக்கு ஏலம்

புத்ராஜெயா, செப் 22 : 2026 மலேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட "H" தொடர் சிறப்புப் பதிவு எண்களின் (NPI) ஏலம் மூலம், சாலைப் போக்குவரத்துத் துறை,9 கோடியே 12 லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் வசூலைப் பதிவுச் செய்தது.

செப்டம்பர் 16 முதல் நேற்று முன்தினம் வரை JPJeBid தளம் மூலம் நடத்தப்பட்ட இந்த ஏலத்தில், ஏலத் தொகை மூலமாக 8 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டும், சேவைக்கட்டணம் மூலமாக 19 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட்டும் கிடைத்ததாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக 34,664 ஏலதாரர்கள் இதில் பங்கேற்றனர் என்றும், 8,223 பதிவு எண்களுக்கு ஏலம் கேட்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அதில் "H" தொடர் சிறப்புப் பதிவு எண்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஏலத்தில் 'H 1' எண் அதிகபட்சமாக 1 கோடியே 78 ஆயிரம் ரிங்கிட்டுக்கு ஏலம் போனது என்றும், அதனைத் தொடர்ந்து 'H 9' (40 லட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட்), 'H 3' (40 லட்சத்து 21 ஆயிரம் ரிங்கிட் ), 'H 5' (40 லட்சத்து ஆயிரம் ரிங்கிட்), 'H 8' (40 லட்சம் ரிங்கிட்) மற்றும் 'H 6' (33 லட்சத்து எட்டாயிரம் ரிங்கிட்) ஆகிய எண்கள் அதிக விலைக்கு ஏலம் போனதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 'H 1001' மற்றும் 'H 100' ஆகிய எண்களை ஏலம் எடுக்க தலா 37 ஏலதாரர்கள் போட்டியிட்டனர் என்றும், 'H 1805' எண்ணுக்கு 36 ஏலதாரர்களும், 'H 1777' மற்றும் 'H 4818' ஆகிய எண்களுக்கு தலா 32 ஏலதாரர்களும் போட்டியிட்டதாக லோக் கூறினார்.

இந்த சிறப்புப் பதிவு எண் ஏலம் என்பது வெறும் எண்களுக்கான வரவேற்பு மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் டிஜிட்டல் உருமாற்றத்தின் வெற்றிக்குக் கிடைத்த சான்றாகும் என்றும், JPJeBid தளம் இந்த ஏல நடைமுறையை எளிதானதாகவும், விரைவானதாகவும், திறமையாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மிக முக்கியமாக, இந்த முயற்சியின் மூலம் ஈட்டப்படும் ஒவ்வொரு வருவாயும், சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள் உட்பட போக்குவரத்து அமைச்சும் சாலைப் போக்குவரத்துத் துறை மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக மீண்டும் மக்களுக்கே நன்மையாகச் சென்றடையும் என்று அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.