ஷா ஆலாம்,செப் 2 : அக்டோபர் 5 முதல் மை.ஈ.ஜி (MYEG) குழுமத்தின் மூலம் வழங்கப்படும் தனது அனைத்துச் சேவைகளையும் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) நிறுத்திவைக்கவுள்ளது;
நிறைவேற்றப்படாத அல்லது தீர்க்கப்படாத ஒப்பந்தக் கடமைகளை இதற்குக் காரணமாக அத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சேவை நிறுத்தம், தங்களின் வசூல் முகவர்களாகச் செயல்படும் மை. ஈ.ஜி. சென்டிரியான் பெர்ஹாட் (My E.G. Sdn Bhd) மற்றும் ஜெட்ரிக்ஸ் ஏஐ பெர்ஹாட் (Zetrix AI Berhad) ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அத்துறை தெரிவித்தது.
இது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.01 மணி முதல் அமலுக்கு வரும்.
இதன் வழி,MYEG குழுமத்தின் மூலம் தற்போது கிடைக்கக்கூடிய அனைத்து JPJ சேவைகளும் அக்டோபர் 5 முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
அதையடுத்து வாகனமோட்டிகள், JPJ முகப்புகள், மைஜேபிஜே (MyJPJ) செயலி, அதன் பொது இணையப்பக்கம், கியோஸ்க்குகள் (kiosks), நடமாடும் JPJ வாகனங்கள் மற்றும் அஞ்சலகங்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மற்றும் மாற்று வழிகள் மூலம் தொடர்ந்து அத்துறையின் சேவையைத் தொடர்ந்து பெறுவார்கள் என்று JPJ தெரிவித்தது.
சாலை வரி, ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பித்தல், எல்-லைசென்ஸ் விண்ணப்பங்கள், மற்றும் போக்குவரத்து அபராதங்களைச் சரிபார்த்து பணம் செலுத்துதல் ஆகியவை அதில் அடங்கும்.
வாகன உரிமையாளர் பெயர் மாற்றத்தை, JPJ முகப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கியோஸ்க்குகள், JPJ பொது இணையப்பக்கம் மற்றும் சில குறிப்பிட்ட சேவைகளை இஆட்டோ (eAuto) மூலம் மேற்கொள்ளலாம்.
அக்டோபர் 5-ஆம் தேதிக்கு முன்னதாக MYEG மூலம் பதிவு செய்யப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட நெடுஞ்சாலை குறியீட்டுத் தேர்வுக்கான (KPP01) பதிவுகள் செல்லுபடியாகும் என்றும், திட்டமிட்டபடி அவை தொடரலாம் என்றும் JPJ கூறியது.
அக்டோபர் 5 முதல் செய்யப்படும் புதிய பதிவுகள், நாடு முழுவதும் உள்ள ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள KPP தேர்வு மையங்கள் மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் போக்குவரத்துச் அபராதங்களைச் செலுத்தும் மலேசியர் அல்லாதவர்களுக்கு, ஜொகூரில் உள்ள சுல்தான் அபு பக்கர் வளாகம் மற்றும் சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நடமாடும் JPJ வாகனங்கள் (Mobile JPJ) பயன்பாட்டில் இருக்கும்.







