ஷா ஆலாம், நவ 22 : ஹாங்காங் பொதுவிருது பூப்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் இறுதியாட்டத்தில் , ஜப்பானின் சுமிரே நகடே - மியு தகாஹாஷி இணையை வீழ்த்தி தேசிய வீராங்கனைகளான பியர்லி டான் - எம். தினா இணையினர் மலேசியாவிற்கு இரட்டை வெற்றியைத் தேடித் தந்தனர்.
முன்னதாக இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதியாட்டத்தில் , இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னாண்டோ - டேனியல் மார்தின் இணையைத் தோற்கடித்து மேன் வெய் சோங் - டீ காய் வுன் இணையினர் வெற்றியாளராக வாகை சூடினர்.
பியர்லி - தினா இணையினர் 22-20, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பெற்ற இந்த வெற்றி , கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தைபே பொது விருதில் சுமிரே - மியு இணையிடம் நேர் செட்களில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்க்கும் விதமாக அமைந்தது.
1982-ஆம் ஆண்டு ஹங்காங் பொது விருது தொடங்கப்பட்டதிலிருந்து, அப்போட்டியை இரு முறை வென்ற ஒரே மலேசிய மகளிர் இரட்டையர் இணையினர் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
முன்னதாக இவர்கள் 2024-ஆம் ஆண்டிலும் இப்போட்டியில் வெற்றி பெற்றனர்.
இவ்வாண்டில் இதுவரை ஐந்து இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ள பியர்லி - தினா இணையினர், கடந்த ஜனவரியில் நடைபெற்ற இந்தோனேசியா மாஸ்டர்ஸ் மற்றும் கடந்த மாதம் நடைபெற்ற டென்மார்க் பொது விருது ஆகிய தொடர்களில் வென்றதைத் தொடர்ந்து, உலக சுற்றுப்பயணத்தில் (World Tour) தங்களது மூன்றாவது வெற்றியைக் கைப்பற்றியுள்ளனர்.
வருகிற டிசம்பர் 9 முதல் 13 வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ள 35 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கொண்ட உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிக்கான (World Tour Finals) தகுதிப் பட்டியலில் இவர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பிடிப்பவர்கள் மட்டுமே இந்த இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள் (ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சமாக இரு வீரர்கள்/இணைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்).
இன்றைய வெற்றியின் மூலம் பியர்லி - தினா இணை 39,500 அமெரிக்க டாலரைப் (RM162,551) பரிசுத்தொகையாகப் பெற்றனர்.
இரண்டாம் இடம் பிடித்த ஜோடிக்கு 19,000 அமெரிக்க டால (RM78,189) வழங்கப்பட்டது.








