ஷா ஆலாம், அக் 24 - மலேசிய மகளிர் இரட்டையர் ஜோடியான பியர்லி டான் - எம். தினா, ஜப்பானின் ரின் இவானாகா - கீ நகஷினி ஜோடியை 21-17, 22-20 என்ற நேர் செட்களில் வீழ்த்தி தங்களின் இரண்டாவது பிரெஞ்சு பொது விருது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் 117 ஆண்டுகால பிரெஞ்சு பொது விருது வரலாற்றில் இரு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே மலேசிய மகளிர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டில் இவர்கள் இப்போட்டியில் வெற்றியாளராக வாகை சூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் டென்மார்க் பொது விருதை வென்ற பியர்லி-தினா ஜோடி, இவ்வாண்டு ஜனவரியில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றனர்.
பிரெஞ்சு பொது விருதின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற இரண்டாவது மலேசிய ஜோடி இவர்களாவர். முன்னதாக, நாட்டின் கலப்பு இரட்டையர் ஹூ பங் ரொன் - லை பெய் ஜிங் இணையினர் அரையிறுதியில் தங்களது எதிரணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
பிரெஞ்சு பொது விருது இரட்டையர் பிரிவில் வெற்றியாளராகும் ஜோடிக்கு 70,300 அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்.







