ஷா ஆலாம்,நவ 21 : வீடு வாங்குவதற்கு இன்னும் வசதி இல்லாதவர்களுக்கு , சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 'வாடகையில் இருந்து பின்னர் சொந்தமாக்கும் ' (Rent-to-Own) வீட்டுவசதித் திட்டத்தின் கால அளவை ஐந்திலிருந்து எட்டு ஆண்டுகளாக நீட்டிக்க வாய்ப்புள்ளதாக மாநில வீடமைப்பு, கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா (Datuk Borhan Aman Shah) தெரிவித்தார்.
வீடு வாங்குவதற்குப் போதுமான வருமானம் இல்லாத புதிதாகத் திருமணமான தம்பதியினரை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திட்டம், அவர்கள் தங்களது நிதி நிலையை மேம்படுத்திக் கொள்வதற்காகத் தற்போது ஐந்து ஆண்டு கால வாடகை அவகாசத்தை வழங்குகிறது.
"ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களால் வீடு வாங்கத் தகுதி பெற முடியாவிட்டால், அவர்கள் கால நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம்; அது எட்டு ஆண்டுகள் வரை இருக்க வாய்ப்புள்ளது.
அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று செக்ஷன் 7-இல் உள்ள சென்ட்ரல் ஐ-சிட்டி (Central I-City) பேரங்காடியில் நடைபெற்ற 'சிலாங்கூர் சொத்து கண்காட்சியைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் தற்போது சுமார் 2,000 வீடுகள் உள்ளன. விண்ணப்பத்தாரரின் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்குக் கடன் நிதி உதவி பெறுவதற்கும் மாநில அரசு உதவி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், குடியிருக்கும் நபர் செலுத்தும் வாடகையில் 30 விழுக்காடு, அவர்கள் தங்களது முதல் வீட்டை வாங்குவதற்கு உதவும் வகையில் மீண்டும் அவர்களுக்கே திருப்பித் தரப்படும்.
சாதாரணமாக வாடகைக் கட்டணம் RM1,000-க்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இத்திட்டத்தில் சேவைக் கட்டணங்களையும் சேர்த்து மாத வாடகை சுமார் RM800 முதல் RM900 வரை மலிவு விலையில் பராமரிக்கப்படுகிறது என்றும் போர்ஹான் குறிப்பிட்டார்.
"இது மிகவும் சிறந்ததொரு திட்டமாகும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் சொந்தமாக வீடு வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது; அதன் பிறகு அவர்கள் தற்போது குடியிருக்கும் வீட்டை வேறொருவருக்கு வழங்க முடியும்," என்று அவர் கூறினார்.
மேலும், 'ருமா சிலாங்கூர்கு 2027' (Rumah Selangorku 2027) திட்டம் குறித்துப் பேசிய போர்ஹான், ஏற்கனவே சொந்த வீடு இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும், குறிப்பாகப் புதிதாகத் திருமணமான தம்பதியினருக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
"அவர்களுக்கு ஏற்கனவே சொந்த வீடு இருக்கக் கூடாது என்பதே முதல் விதியாகும். இது அவர்களின் முதல் வீடாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் புதிதாகத் திருமணமானவர்களாக இருக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
"தங்களுக்குப் பரிசீலனை வழங்கப்பட வேண்டும் என்று விண்ணப்பத்தாரர் கருதினால், சிலாங்கூர் வீடமைப்பு, சொத்து வாரியத்தின் அலுவலகத்திற்கு நேரில் வரலாம் “ என்றாரவர்









