மோரிப் ‘ருமா சிலாங்கூர்கு’ திட்டத்தை மீட்க PNB நிறுவனத்துடன் சிலாங்கூர் அரசு ஒத்துழைப்பு

9 நவம்பர் 2026, 9:15 AM
மோரிப் ‘ருமா சிலாங்கூர்கு’ திட்டத்தை மீட்க PNB நிறுவனத்துடன் சிலாங்கூர் அரசு  ஒத்துழைப்பு

கோலாலம்பூர், நவ 9 : கோலா லங்காட்டில் கைவிடப்பட்ட மோரிப் 'ருமா சிலாங்கூர்கு' (Rumah Selangorku Morib) வீடமைப்புத் திட்டத்தை மீட்க , அந்நிலத்தின் உரிமையாளரான பெர்மோடலான் நேஷனல் (PNB) நிறுவனத்தின் ஒத்துழைப்பை, சிலாங்கூர் மாநில அரசாங்கம் பெற்றுள்ளது.

சிலாங்கூர் வீடமைப்பு- சொத்து வாரியம் (LPHS) மூலமாக மாநில அரசாங்கம், பிஎன்பி (PNB) நிறுவனம் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள மீட்பு மேம்பாட்டாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து இந்தத் திட்டத்திற்கான தீர்வைக்காண தொடர்ந்து ஒருங்கிணைந்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென, வீடமைப்பு உட்கட்டமைப்புக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ போஹான் அமான் ஷா தெரிவித்தார்.

மோரிப் ருமா சிலாங்கூர்கு திட்டப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக , பிஎன்பி குழுமத்தின் தலைவர் ராஜா டான் ஸ்ரீ அர்ஷத் ராஜா துன் உடாவை அண்மையில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

" கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டப் பிரச்சினைக்கு, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதன் மூலம் மட்டும் தீர்வு கண்டு விட முடியாது. மாறாக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஒரே மேசையில் அமர்ந்து, திறந்த மனதுடன் கலந்துரையாடி ஒரு பொதுவான உடன்பாட்டை எட்ட முன்வர வேண்டும்" என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அசல் மேம்பாட்டாளர் நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை மீட்டெடுத்துத் தொடர்வதற்காக ஒரு புதிய மேம்பாட்டாளரை நியமிக்க சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் இத்திட்டப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் மாநில அரசின் உறுதியை ஏற்கனவே வழங்கியிருந்தார்.

அசல் மேம்பாட்டாளர் எதிர்கொண்ட சிக்கல்களால், 17 அடுக்கு மாடிகளைக் கொண்ட அக்குடியிருப்புத் திட்டம், திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை.

இதன் காரணமாக, வீடு வாங்கிய சுமார் 500 பேர், தங்களின் சொந்த வீட்டைப் பெறுவதற்காக கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் தற்போதைய 2026 -ஆம் ஆண்டு வரை நீண்ட நாட்களாகக் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.