ஷா ஆலாம், நவ.3: இளைய தலைமுறையினர் சொந்த வீடு வாங்குவதில் பல்வேறு நிதிச் சிக்கல்களை எதிர்கொள்வதாக மாநில வீடமைப்பு மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
குறிப்பாக ஆரம்பகட்ட முன்பணம், ஏற்கெனவே உள்ள நிதிக் கடப்பாடுகள் மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கான தகுதி நிபந்தனைகள் ஆகியவை அவர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சிலாங்கூர் அரசின் ரூமா சிலாங்கூர் கூ மலிவு விலை வீடுகளுக்காக விண்ணப்பித்துள்ளவர்களில் 45% திருமணமாகாதவர்கள் என்று போர்ஹான் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் வரை மொத்தம் 179,250 பேர் ரூமா சிலாங்கூர் கூ வீடுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 80,662 பேர், அதாவது 45% திருமணமாகாதவர்கள் மற்றும் 84,248 பேர் அல்லது 47% திருமணமானவர்கள் ஆவர்.
இந்தப் புள்ளிவிவரங்கள், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே சொந்த வீடு வாங்குவதற்கான ஆர்வமும் தேவையும் அதிகரித்து வருவதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக போர்ஹான் தெளிவுப்படுத்தினார்.
மொத்த விண்ணப்பதாரர்களில் 92 விழுக்காட்டினர் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 100,380 பேர் அல்லது 56% உள்ளனர். அதேவேளையில், 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் 64,530 பேர் அல்லது 36% பதிவாகியுள்ளனர்.

இதனைக் கருத்தில்கொண்டு, இளைய தலைமுறையினர் சொந்தமாக வீடு வாங்குவதற்கான நிதியைச் சேமிக்க மாநில அரசு ஸ்மார்ட் சேவா வாடகைத் திட்டத்தை மாற்று வாய்ப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், சந்தை விலையைவிடக் குறைவான வாடகையில் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை வீடுகளில் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் வாடகை மற்றும் சேமிப்பு என்ற அடிப்படையில் செயல்படுவதாகக் குறிப்பிட்ட போர்ஹான், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளையும் வாடகைக் காலத்தையும் பூர்த்தி செய்யும் தகுதியுடைய வாடகைதாரர்கள், செலுத்திய நிகர வாடகைத் தொகையில் 30% திரும்பப் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றார்.
இந்தத் தொகையை எதிர்காலத்தில் சொந்த வீடு வாங்குவதற்கான சேமிப்பாகப் பயன்படுத்துவதுடன், வீட்டிற்கான முன்பணம் மற்றும் இதர கொள்முதல் செலவுகளையும் ஈடுகட்டிக்கொள்ள முடியும் என அவர் விளக்கினார்.
இத்திட்டத்தில் பங்கேற்றவர்களில் இதுவரை 41 பேர் ரூமா சிலாங்கூர் கூ வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 40 பேருக்கு வீடு வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் போர்ஹான் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த வாய்ப்பு சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் வழங்கும் தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும், மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும்போது வேலைவாய்ப்பு மையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றுக்கு மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, இன்றைய இளைய தலைமுறையினர் சொந்த வீடு வாங்குவதற்கு வீட்டு விலை, ஆரம்பகட்ட முன்பணம் மற்றும் இதர நிதிச் சுமைகள் முக்கியத் தடைகளாக இருப்பதாகச் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துச் சபையின் (LPHS) இடைக்காலத் தலைமை நிர்வாக இயக்குநர் முகமட் ஹஃபிஸ் ஹசான் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் வீடுகளின் சராசரி விலை 400,000 ரிங்கிட்டைத் தாண்டியுள்ள நிலையில், வேலைவாய்ப்பில் புதிதாகக் கால்பதிக்கும் இளைஞர்களுக்கு இத்தொகையைச் சமாளிப்பது பெரும் சவாலாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைக் கருத்தில்கொண்டே, வீடு வாங்குவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ LPHS வழியாக ரூமா சிலாங்கூர் கூ போன்ற மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை மாநில அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
அதேவேளையில், நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் வீடமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் சேவை அடுக்குமாடிக் குடியிருப்புகள் (Serviced Apartments) ஆகியவற்றின் மேம்பாட்டுத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் மூலம் கட்டுமானச் செலவுகளை அதிகளவில் உயர்த்தாமல், பொதுமக்களுக்குக் கூடுதல் மலிவு விலை வீடுகளை வழங்க முடியும் என்றும் அவர் விளக்கினார்.
2030ஆம் ஆண்டுக்குள் 200,000 மலிவு விலை வீடுகள் என்ற இலக்கை எட்டுவதற்கான மாநில அரசின் முயற்சிகள் தொடரும் நிலையில், குறிப்பாக சொந்த வீடு வாங்குவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் இளைய தலைமுறையினருக்கு இத்திட்டங்கள் பெரும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







