34 தொழிற்சாலைகளில் குடிநுழைவுத் துறை சோதனை; 519 வெளிநாட்டினர் கைது

21 நவம்பர் 2026, 3:58 AM
34 தொழிற்சாலைகளில் குடிநுழைவுத் துறை சோதனை; 519 வெளிநாட்டினர் கைது

ஷா ஆலாம், நவ 21 : நவம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில் நாடு முழுவதும் உள்ள 34 தொழிற்சாலைகளை இலக்காகக் கொண்டு குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் மொத்தம் 519 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

அதிக அளவில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்வதாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் 569 குடிநுழைவு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு, 1,702 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

தொழிலாளர் துறை, தேசியப் பதிவுத் துறை, மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு - பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஊராட்சி மன்றங்களின் உதவியுடன் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அத்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் வங்காளதேசம், மியன்மார், நேபாளம், இந்தோனேசியா, இந்தியா, சீனா, தைவான் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என்றும் குடிநுழைவுத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) மாலை 6 மணியளவில் புத்ராஜெயா தலைமையகத்தைச் சேர்ந்த அமலாக்கப் பிரிவினர் கிள்ளான், மேருவில் உள்ள ஆணி தயாரிக்கும் தொழிற்சாலையில் நடத்திய சோதனையில் 131 பேர் பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் 71 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களின் புகார்கள், உளவுத்துறைத் தகவல்கள் மற்றும் அமலாக்கக் கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், குறிப்பாக நடைமுறையில் உள்ள விதிகளை மீறி வெளிநாட்டினரைப் பணியமர்த்துவது மற்றும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது போன்ற குடிநுழைவுக் குற்றங்களைக் கண்டறிய இந்த நாடு தழுவிய சோதனை நடத்தப்பட்டதாக அத்துறை கூறியது.

கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணை மற்றும் தொடர்புடைய சட்டங்களின் கீழ் மேல் நடவடிக்கை எடுப்பதற்காகக் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தொழிற்சாலைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்தி நிர்வகிக்கும் தரப்புகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட விசாரணைகளுக்கு உதவும் வகையில், மலேசியர்கள் 42 பேருக்கு சாட்சி அழைப்பாணை (witness summonses) வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்துறை தெரிவித்தது.

குடிநுழைவுச் சட்டங்களை மீறும் வெளிநாட்டினர் மீது மட்டுமல்லாமல், அத்தகைய விதிமீறல்களுக்கு இடமளிக்கும் முதலாளிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் உடந்தையாக இருக்கும் எந்தவொரு தரப்பினர் மீதும் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குடிநுழைவுத் துறை எச்சரித்தது.

மேருவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் குடிநுழைவுத் துணைத் தலைமை இயக்குநர் (செயல்பாடுகள்) டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி மற்றும் அமலாக்கப் பிரிவு இயக்குநர் டத்தோ பஸ்ரி ஓத்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.