ஷா ஆலாம், அக் 31 - சிலாங்கூர், மலேசிய குடிநுழைவுத்துறை, கடந்த 17 மாதங்களில் 83,787 வெளிநாட்டினரை வெற்றிகரமாக அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
கடந்த 2025 மே முதல் இவ்வாண்டு செப்டம்பர் 30 வரை செயல்படுத்தப்பட்ட வெளிநாட்டு குடியேற்றக்காரர்களை திருப்பி அனுப்பும் இரண்டாவது திட்டத்தின் கீழ், அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சிலாங்கூர் குடிநுழைவுத் துறையின் இடைக்கால இயக்குநர் முஹமட் குசைரி கமாருதின் செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த 17 மாத காலத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, மலேசியாவின் மற்ற மாநிலங்களை விட சிலாங்கூரில் தான் மிக அதிகமாகும்.
திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 60,913 ஆண்களும், 20,293 பெண்களும் அடங்குவர். இவர்களுடன் 1,375 சிறுவர்களும் மற்றும் 1,206 சிறுமிகளும் இந்த திட்டத்தின் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் அபராதத் தொகையாக கிட்டத்தட்ட 4 கோடியே 10 லட்சம் ரிங்கிட்டும், சிறப்பு விசா கட்டணமாக 16 லட்சத்து 80,000 ரிங்கிட்டும் என மொத்தம் 4 கோடியே 26 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையை சிலாங்கூர் குடிநுழைவுத் துறை வருவாயாக ஈட்டியுள்ளது.
இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விசா விதிகளை மீறிய அல்லது மலேசியாவில் தங்கும் கால அவகாசம் முடிந்த வெளிநாட்டினர், ஷா ஆலாம், கிள்ளான் துறைமுகம், கெலானா ஜெயா மற்றும் காஜாங் ஆகிய நான்கு கிளைகளில் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகங்களை நாடி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதே வேளையில், சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, ஷா ஆலாம், சுபாங் ஜெயா மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மொத்தம் 321 நபர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஒரு பொழுதுபோக்கு மையம், இரு பிளாஸ்டிக் மற்றும் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஐந்து குடியிருப்பு அடுக்குமாடி வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
குடிநுழைவுத் துறை அதிகாரிகள், ஊழியர் சேம நிதி வாரிய அதிகாரிகள், மனிதவளத்துறை மற்றும் மலேசிய சிவில் பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 130 பேர் இந்த ஒருங்கிணைந்த கூட்டுப் பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின் முடிவில், அடையாள ஆவணங்கள் இல்லாதது, விசா விதிமுறைகளை மீறியது மற்றும் தங்கும் கால அவகாசம் முடிந்த பிறகும் தங்கியிருந்தது போன்ற பல்வேறு குடிநுழைவு குற்றங்களுக்காக 25 முதல் 50 வயதுக்குட்பட்ட 242 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.







